மோட்டார் சைக்கிள் பந்தயங்களில் ஈடுபடுவோரைப் பிடிக்க தனிப்படை - கோயம்புத்தூர் காவல் ஆணையர் அதிரடி...

First Published Jan 9, 2018, 7:56 AM IST
Highlights
Coimbatore police commissioner Action to catch motorcycle racers


கோயம்புத்தூர்

கோயம்புத்தூரில் மோட்டார் சைக்கிள் பந்தயங்களில் ஈடுபடுவோரைப் பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது என்றும் பிடிபட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் காவல் ஆணையர் கு.பெரியய்யா தெரிவித்துள்ளார்.

கோயம்புத்தூர் விழாவின் ஒரு பகுதியாக கங்கா மருத்துவமனை மற்றும் கங்கா செவிலியர் கல்லூரி சார்பில் சாலை பாதுகாப்பு தொடர்பான விழிப்புணர்வு நிகழ்ச்சி நேற்று நடைப்பெற்றது.

இந்த நிகழ்ச்சியை மாநகர காவல் ஆணையர் கு.பெரியய்யா தொடங்கி வைத்தார்.  பின்னர் அவர் செய்தியாளர்களிடம், "கோயம்புத்தூர் மாநகரில் மட்டும் நாள்தோறும் 300 வாகனங்கள் புதிதாக பதிவு செய்யப்படுகின்றன. இதன்மூலமாக ஆண்டுக்கு சுமார் 1 இலட்சம் புதிய வாகனங்கள் கோயம்புத்தூரில் பதிவு செய்யப்படுகிறது.  

வாகனப் பெருக்கத்திற்கு ஏற்ற வகையில் சாலைகள் விரிவாக்கப்படாத சூழல் உள்ளதால் வாகன ஓட்டிகள் சாலை விதிகளை முறையாகக் கடைபிடித்தால்தான் சாலை விபத்துகளைக் குறைக்க முடியும்.

தலைக்கவசம் அணியாமல் இருசக்கர வாகனத்தில் செல்பவர்களே அதிகளவில் விபத்துகளில் சிக்குகின்றனர். குடிபோதையில் வாகனம் இயக்குதல், செல்போனில் பேசிக் கொண்டு வாகனத்தில் செல்லுதல் போன்றவற்றைத் முற்றிலும் தவிர்க்க வேண்டும்.

இதுதொடர்பாக பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகளிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தும் தன்னார்வலர்களின் முயற்சி வரவேற்கத்தக்கது.

கோயம்புத்தூர் மாநகரில் இரு சக்கர வாகன பந்தயங்களில் ஈடுபடும் நபர்களைப் பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.  பந்தயங்களில் ஈடுபடுபவர்கள் மீது கைது உள்ளிட்ட கடும் நடவடிக்கைகள் எடுக்கப்படும்" என்று அவர் தெரிவித்தார்.

கோயம்புத்தூர் மாநகரில் உள்ள 13 முக்கியச் சந்திப்புகளிலும் ஜனவரி 10-ஆம் தேதி வரையில் கல்லூரி மாணவர்கள் காலை,  மாலை வேளைகளில் சாலை பாதுகாப்பை வலியுறுத்தி பிரச்சாரத்தில் ஈடுபட உள்ளனர்.

இதில், தலைக்கவசம் அணிவது, வாகனம் இயக்கும்போது செல்போனில் பேசுவதைத் தவிர்த்தல், சாலை விதிகளைப் பின்பற்றுவதன் அவசியம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த உள்ளனர்.

இந்த நிகழ்ச்சியில், கோயம்புத்தூர் மாநகர துணை ஆணையர் (போக்குவரத்து) சுஜித்குமார், கங்கா மருத்துவமனை இயக்குநர் மருத்துவர் ராஜசேகரன் மற்றும் தன்னார்வலர்கள் பங்கேற்றனர்.

click me!