
கோயம்புத்தூர்
கோயம்புத்தூரில் அரசு பேருந்து மோதியதில் தனியார் பேருந்தின் கண்ணாடி தூள் தூளாக உடைந்ததால் பயந்துபோன தற்காலிக ஓட்டுநர் அரசு பேருந்தை ஆஃப் கூட செய்யாமல் அப்படியே இறங்கி ஒடிவிட்டார்.
போக்குவரத்துத் தொழிலாளர்களின் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுதால் கோயம்புத்தூரில் சில அரசு பேருந்துகள் தற்காலிக ஓட்டுநர்கள் கொண்டு இயக்கப்பட்டு வருகின்றன.
கோயம்புத்தூரை அடுத்த வடவள்ளியில் நேற்று முன்தினம் தற்காலிக ஓட்டுநர் ஓட்டிய அரசு பேருந்து மோதி முதியவர் ஒருவர் பலத்த காயம் அடைந்தார்.
இந்த நிலையில், நேற்று மதியம் ஒரு மணியளவில், காந்திபுரத்திலிருந்து தேவராயபுரம் செல்லும் தனியார் பேருந்து (தடம் எண் 99) காந்திபுரம் நகர பேருந்து நிலையத்தில் இருந்து வெளியே வந்து நின்றது.
அந்த பேருந்துக்கு பின்னால் வந்த அரசு நகர பேருந்து (தடம் எண் 33)காந்திபுரத்தில் இருந்து கிணத்துக்கடவுக்கு செல்வதற்காக வந்துக் கொண்டிருந்தது. அரசு பேருந்தை தற்காலிக ஓட்டுநர் ஓட்டினார்.
முன்னால் நின்று கொண்டிருந்த தனியார் பேருந்தை அரசு பேருந்து முந்திச் சென்று இடது பக்கம் திருப்பியபோது தற்காலிக ஓட்டுநர் இடதுபுறம் பக்கவாட்டை கவனிக்கவில்லை. இதில், அரசு பேருந்தின் பக்கவாட்டு படிக்கட்டு தனியார் பேருந்தின் பின்பக்கத்தில் மோதியது. இதனால் பேருந்தின் பின்பக்க கண்ணாடி உடைந்து தூள் தூளாக சிதறியது.
விபத்து நடந்ததும் தற்காலிக ஓட்டுநர் பேருந்தின் என்ஜினை ‘ஆஃப்’ செய்யாமல் பேருந்தைவிட்டு இறங்கி ஓடிவிட்டார். விபத்து நடந்ததும் அதிர்ச்சி அடைந்த பயணிகள் அரசு பேருந்தில் இருந்து அலறி அடித்துக் கொண்டு இறங்கி ஓடினர்.
இந்தச் சம்பவத்தை தொடர்ந்து தனியார் பேருந்து ஓட்டுநர் மற்றும் நடத்துநர்கள் அங்கு திரண்டனர். அவர்கள் அரசு தற்காலிக ஓட்டுநரைத் தேடினர். ஆனால் அவர் சிக்கவில்லை.
இதுகுறித்து தகவல் கிடைத்ததும் அருகில் இருந்த போக்குவரத்து காவலாளர்கள் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை நடத்தினர். அப்படியிருந்தும் விபத்து ஏற்படுத்திய தற்காலிக ஓட்டுநரைக் கண்டுபிடிக்க முடியவில்லை.
இதைத் தொடர்ந்து சாலையின் குறுக்கே நிறுத்தப்பட்டிருந்த அரசு பேருந்தை மற்றொரு ஓட்டுநர் ஓட்டிச் சென்று அருகில் உள்ள காட்டூர் காவல் நிலையத்தில் நிறுத்தினார்.