
நிலக்கரி தட்டுப்பாடு காரணமாக தூத்துக்குடியில் 3 யூனிட்களில் மின் உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளது.
தூத்துக்குடி அனல்மின் நிலையத்தில் தினமும் தலா 210 மெகாவாட் மின் உற்பத்தி திறன் கொண்ட 5 அலகுகள் மூலம் சுமார் 1,050 மெகாவாட் வரை மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில் நிலவும் நிலக்கரி தட்டுப்பாடு காரணமாக மொத்தமுள்ள 5 யூனிட்களில் 3 யூனிடள் நிறுத்தப்பட்டுள்ளன. 2 மற்றும் 4 யூனிட் மட்டும் செயல்பட்டு வருகிறது.இதனால் தினமும் 630 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுவது நிறுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் தமிழகத்திற்கு தேவையான நிலக்கரி ஒதுக்கீடு செய்ய மத்திய அரசிடம் தமிழக அரசு வலியுறுத்தி வருகிறது.
இந்நிலையில் சமீபத்தில் செய்தியாளர்களை சந்தித்த தமிழக மின் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி, தினமும் 72 ஆயிரம் டன் நிலக்கரி, மின் உற்பத்திக்கு தேவைப்படுகிறது. ஆனால் மத்திய அரசு 50 ஆயிரம் டன் நிலக்கரி மட்டுமே தரும் நிலையில், முதல்கட்டமாக 4 லட்சத்து 80 ஆயிரம் டன் நிலக்கரி இறக்குமதி செய்வதற்காக டெண்டா் விடப்படவுள்ளது. நிலக்கரி விலை சா்வதேச அளவில் அதிகரித்துள்ள நிலையில், வெளிப்படையான ஒப்பந்தம் கோரப்பட்டுள்ளது என்றார்.
இதனிடையே நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களில் நிலக்கரி தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. நாட்டில் மொத்தமுள்ள 178 அனல் மின் நிலையங்களில் சுமார் 100-ல் மிகவும் குறைவான அளவில் நிலக்கரி கையிருப்பு உள்ளது. அதனால் குஜராத், மகாராஷ்டிரா, உத்தரபிரதேசம், பஞ்சாப் உள்ளிட்ட 12 மாநிலங்கள் பெரும் மின் நெருக்கடியை சந்தித்துள்ளன. மத்திய அரசின் மின்சாரம்,நிலக்கரி மற்றும் ரயில்வே ஆகிய மூன்று துறைகளுக்கு இடையே போதிய ஒத்துழைப்பு இல்லாததே இதற்கு காரணம் என்று கூறப்படுகிறது. எனவே விரைவில் பல்வேறு மாநிலங்களில் மின் தடை ஏற்பட அதிக வாய்ப்புள்ளது.
மேலும் படிக்க: அதிர்ச்சி தகவல்.. ! கடும் நிலக்கரி தட்டுப்பாடு.. 12 மாநிலங்கள் இருளில் மூழ்கும் அபாயம்.. தமிழ்நாடு நிலை ..?