
ஆசிரியரை தாக்கும் மாணவன்
தாய், தந்தைக்கு அடுத்து, தெய்வத்திற்கு ஒரு படி மேலே வைத்து பார்க்கப்படும் ஆசிரியர்கள் மீது மாணவர்கள் தாக்குதல் நடத்தும் சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந்த சம்வபம் பொதுமக்கள் மத்தியில் மிகுந்த கவலையளிப்பதாக உள்ளது. தங்களின் எதிர்காலத்தை நிர்ணயம் செய்யப் போகும் பள்ளிக்கு, பாடம் பயிலச் செல்லும் மாணவர்கள் சமூக விரோதிகள் போல செயல்படுவதும், கல்வி கற்பிக்கும் ஆசிரியர்களையே மாணவர்கள் தரம் தாழ்ந்து தாக்க முற்படுவதும் அடுத்த தலைமுறை மிகப் பெரிய ஆபத்தை நோக்கி செல்கிறது என்பதை நன்கு உணர முடிகிறது என சமூக ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.
பாதுகாப்பு கேட்கும் ஆசிரியர்கள்
ஏற்கனவே தேனி மாவட்ட பள்ளிக்கூடத்தில் போலீசை கத்தியால் குத்துவேன், நான் ஏறினால் ரயில், இறங்கினால் ஜெயில், போட்டா பெயில் என்று மிரட்டி பேசும் மாணவனுக்கு பயந்து 3 அரசு பள்ளி ஆசிரியர்கள் பணி பாதுகாப்பு இல்லை என மாவட்ட கல்வி அலுவலரிடம் புகார் அளித்துள்ளனர்.இது போன்ற சம்பவங்கள் நடைபெற்று வந்த நிலையில், மற்றொரு சம்பவம் பொதுமக்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. வேலூர் மாவட்டம் ஆதனூரில் உள்ள அரசு பள்ளி ஆசிரியரை மாணவன் ஒருவன் கெட்ட வார்த்தையால் திட்டி அடிக்க முயலும் காட்சி ஒன்று தற்போது இணையதளத்தில் பரவிவருகிறது. பள்ளி இறுதி தேர்வு வர உள்ள நிலையில் மாணவன் தேர்விற்கு தயாராகமல் பள்ளி அறையில் தூங்கியுள்ளான் இது தொடர்பாக ஆசிரியர் மாணவனை கேள்வி கேட்டதற்கு, ஆசியரை மாணவன் அடிக்க முயன்றுள்ளார். மாணவன் அடிக்க முயலும் போது என்ன செய்வதென்று தெரியாமல் ஆசிரியர் அதிர்ச்சியாகி நிற்கும் காட்சிகள் வேதனையை ஏற்படுத்துகிறது. மேலும் மற்றொரு மாணவன் ஆசிரியரை சூழ்ந்து கொண்டு திட்டும் காட்சியும் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அதிர்ச்சியில் சமூக ஆர்வலர்கள்
இந்த காட்சியை பார்த்த சமூக ஆர்வலர்கள் பலரும் கண்டனத்தை தெரிவித்து வருகின்றனர். இளம் தலைமுறையினர் சீரழிந்து தடம்புரண்டு, தடுமாறிப் போவதை தடுக்க வேண்டுமானால் பிஞ்சுகளின் மனதில் நஞ்சை விதைக்கும் அனைத்து விசயங்களுக்கும் அரசு தடை விதிக்க வேண்டும். அத்துடன் மது, சிகரெட் விற்பனையை வரன்முறைபடுத்தி இளம் சிறார்களின் கைகளுக்கு கிடைப்பதை தடுக்க 25வயதுக்கு மேற்பட்டோருக்கே மது, சிகரெட் விற்பனையை செய்ய வேண்டும், அதுமட்டுமின்றி 25வயதுக்கு மேற்பட்டோர் மது, சிகரெட் வாங்கிட அவர்களின் ஆதார் அட்டையை பயன்படுத்தி, கைரேகையை பதிவு செய்து தான் வாங்க, விற்பனை செய்ய வேண்டும், அவ்வாறு வாங்குவோருக்கு ஒரு நாளைக்கு இவ்வளவு தான் அனுமதி என்று கடுமையான சட்டம் கொண்டு வர வேண்டும் என சமூக ஆர்வலர் பொன்னுசாமி கேட்டுக்கொண்டுள்ளார்.