
திருவண்ணாமலை
திருவண்ணாமலையில் கூட்டுறவு சங்கத் தேர்தல் அதிகாரியைக் கண்டித்து, கூட்டுறவு சங்க அலுவலகத்துக்கு பூட்டுப் போட்டு சங்க உறுப்பினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
திருவண்ணாமலை மாவட்டம், தண்டராம்பட்டை அடுத்த தென்கரும்பலூர் கிராமத்தில் தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கம் இயங்கி வருகிறது.
இந்தச் சங்கத்தில் 2903 பேர் உறுப்பினர்களாக உள்ளனர். சங்கத்தின் நிர்வாகக் குழு உறுப்பினர் பதவிக்கு 60 பேர் வேட்புமனு தாக்கல் செய்தனர்.
கடந்த புதன்கிழமை வேட்பு மனு பரிசீலனை நடைபெற்றது. வியாழக்கிழமை வேட்பு மனுக்களை திரும்பப் பெறலாம் என்று தேர்தல் அலுவலர் அறிவித்திருந்தார். ஆனால், தேர்தல் நடத்தும் அலுவலர் சுப்பிரமணி, வியாழக்கிழமை தொடக்க வேளாண் கூட்டுறவு சங்கத்துக்கு வரவில்லை.
எனவே, தேர்தல் அலுவலரைக் கண்டித்து வேட்பு மனு தாக்கல் செய்திருந்த தண்டராம்பட்டு அந்தோனி, சேர்ப்பாப்பட்டு பி.மணி, சக்கரவர்த்தி ஆகியோர் முழக்கங்களை எழுப்பினர். மேலும், கூட்டுறவு சங்கத்திற்கு பூட்டுப் போட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கூட்டுறவு சங்கத் தேர்தலில் இதுபோன்ற முறைகேடுகள் நடப்பதும் இதனை எதிர்த்து போராட்டம் நடத்திய பிறகு தேர்தலில் வெற்றி பெற்றவர்கள் என்று ஆளும் கட்சியை சேர்ந்தவர்களை அறிவிப்பதும் வாடிக்கையாடி விட்டது.
போராட்டக்காரர்களின் எண்ணிக்கையை பார்த்து பல இடங்களில் தேர்தலையும் ரத்து செய்யும் செயல்களும் நடந்துள்ளன.
கூட்டுறவு சங்கத் தேர்தலை கூட நேர்மையாக சந்திக்க முடியாத அளவுக்கு ஆளும் கட்சி மக்களின் அதிருப்தியை சம்பாதித்துள்ளது என்று அரசியல் கட்சிகள் விமர்சிக்கின்றன.