CM Vijay Vs PM Modi: ஆபத்து! தமிழ்நாட்டிற்கு உடனே வேணும்.. விவசாயிகளுக்காக.. பிரதமர் மோடிக்கு முதல்வர் விஜய் பரபரப்பு கடிதம்

Published : May 19, 2026, 08:20 PM IST
CM Vijay Vs PM Modi

சுருக்கம்

தென்மேற்குப் பருவமழையை முன்னிட்டு உரங்களின் தேவை அதிகரிக்கும் என்பதால், உரப்பற்றாக்குறை ஏற்பட்டால் மாநிலத்தின் உணவுப் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் ஏற்படும் என அவர் அக்கடிதத்தில் வலியுறுத்தியுள்ளார்.

காரீப் பருவத்திற்குத் தேவையான உரங்கள், குறிப்பாக யூரியா மற்றும் டிஏபி போன்றவற்றைத் தங்கு தடையின்றி தமிழ்நாட்டிற்கு வழங்கிட வேண்டும் என்று வலியுறுத்தி பிரதமர் நரேந்திர மோடிக்கு தமிழ்நாடு முதலமைச்சர் ஜோசப் விஜய் கடிதம் எழுதியுள்ளார். அதில் தமிழ்நாட்டில் 40 சதவீதத்திற்கும் அதிகமானோர் வேளாண்மையை வாழ்வாதாரமாகக் கொண்டுள்ளனர் என்றும், தமிழ்நாட்டில் சுமார் 48.27 இலட்சம் எக்டரில் நிகர சாகுபடியும், 62.25 இலட்சம் எக்டரில் மொத்த சாகுபடியும் மேற்கொள்ளப்படுவதாகவும் தெரிவித்துள்ளார். 

மேலும், தமிழ்நாட்டில் மொத்த விவசாயிகளில் சுமார் 92 சதவீதம் பேர், சிறு மற்றும் குறு விவசாயிகளாவர் என்றும், இந்தியாவின் மொத்த நீர் வளங்களில் 3 சதவீதம் மட்டுமே தமிழ்நாட்டில் இருப்பதாகவும், நெல், சிறுதானியங்கள், எண்ணெய்வித்துகள், பருத்தி, கரும்பு, காய்கறிகள், மலர்கள், பழங்கள், மூலிகை மற்றும் நறுமணப் பயிர்கள், சுவைதாளிதப்பயிர்கள், தோட்டப்பயிர்கள் எனப் பல்வகைப்பட்ட பயிர்களின் சாகுபடி தமிழ்நாட்டில் மேற்கொள்ளப்படுவதாகவும் தெரிவித்துள்ளார்.

2026-ஆம் ஆண்டு மே மாதம் 10-ஆம் தேதி தமிழ்நாடு முதலமைச்சராகத் தாம் பொறுப்பேற்றதிலிருந்து, பல்வேறு துறைகளின் செயல்பாடுகளைத் துறைவாரியாக ஆய்வு செய்து வருவதாகவும், வேளாண்மை- உழவர் நலத்துறையின் செயல்பாடுகள் குறித்த தனது ஆய்வின்போது, ​​2026-ஆம் ஆண்டு ஏப்ரல், மே மாதங்களுக்கு நிர்ணயிக்கப்பட்ட உரத்தேவையில், 39,001 மெட்ரிக் டன் யூரியா, 28,607 மெட்ரிக் டன் டிஏபி மற்றும் 24,235 மெட்ரிக் டன் பொட்டாஷ் ஆகிய உரங்கள் உர உற்பத்தியாளர்களால் தமிழ்நாட்டிற்கு வழங்கப்படவில்லை என்றும் தெரிவித்து அதற்கான விவரங்களையும் கடிதத்துடன் அனுப்பியுள்ளார்.

மேலும், மாநிலம் முழுவதும் நெல், உளுந்து, பச்சைப்பயறு, நிலக்கடலை, எள், தோட்டக்கலைப்பயிர்கள் ஆகியவற்றின் சாகுபடிப்பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன என்றும், தென்மேற்குப்பருவமழை மே மாதம் மூன்றாம் வாரத்தில் துவங்கும் என்றும் இந்திய வானிலை ஆய்வு மையத்தினால் கணிக்கப்பட்டுள்ளதாலும், மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்துவருவதாலும், காரீப் பருவத்தில் அதிகபட்ச பரப்பில் பயிர் சாகுபடி மேற்கொள்ள விவசாயிகள் மத்தியில் ஆர்வம் எழுந்துள்ள நிலையில், யூரியா மற்றும் டிஏபி உரங்களின் தேவை அதிகரிக்க வாய்ப்புள்ளதாகவும், இத்தருணத்தில், உரப்பற்றாக்குறை ஏற்பட்டால் மாநிலத்தின் உணவுப் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் ஏற்பட வாய்ப்புள்ளதாகவும் தமிழ்நாடு முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் நடப்பு காரீப் பருவத்தில் மொத்த சாகுபடிப் பரப்பில் 40 சதவீதமான 25 இலட்சம் எக்டரில் பல்வேறு பயிர்களை சாகுபடி செய்வதற்கு ஏதுவாக, தேவையான உரங்கள் கிடைப்பதை உறுதி செய்வதில் மாநில அரசு உறுதிபூண்டுள்ளது. பல்வேறு சாதகமான காரணிகளால் நடப்பு காரீப் பருவத்தில் பயிர் சாகுபடியில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதால், யூரியா, டிஏபி போன்ற நேரடி உரங்களின் தேவை எதிர்வரும் நாட்களில் கணிசமாக உயரும் என்று எதிர்பார்க்கப்படுவதாகவும், அதனை நிறைவு செய்திட 3.83 இலட்சம் மெட்ரிக் டன் யூரியா, 1.05 இலட்சம் மெட்ரிக் டன் டிஏபி மற்றும் 0.83 இலட்சம் மெட்ரிக் டன் பொட்டாஷ் ஆகியவற்றை உடனடியாக தமிழ்நாட்டிற்கு வழங்கிட உரிய அலுவலர்களுக்குத் தேவையான அறிவுறுத்தல்களை வழங்கி குறித்த நேரத்தில் உரங்கள் கிடைப்பதை உறுதிசெய்ய வேண்டும் என்றும் தமிழ்நாடு முதலமைச்சர் ஜோசப் விஜய் தனது கடிதத்தில் வலியுறுத்தியுள்ளார்.

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

செந்தில் பாலாஜிக்கு ஸ்கெட்ச்! மீண்டும் ஆட்டத்தை ஆரம்பிக்கும் ED! முதல்வர் விஜய் என்ன செய்யப்போகிறார்
TVK Vijay Cabinet Ready: தமிழக அமைச்சரவை விரிவாக்கம் எப்போது? வெளியான தகவல்.. யார் யாருக்கு வாய்ப்பு!