
மேகதாது அணை விவகாரம் தொடர்பாக தமிழக சட்டப்பேரைவயில் தனித் தீர்மானம் கொண்டுவரப்பட்டு, அனைத்துக் கட்சி ஆதரவுடன் நிறைவேற்றப்பட்டது. அதன் மூலம், கர்நாடக அரசுக்கு எந்தவித தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் அனுமதியையும் மத்திய அரசு அளிக்கக்கூடாது என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.
இதுக்குறித்து பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், “மேகதாது விவகாரத்தில் சட்ட ரீதியான நடவடிக்கையை எடுத்து, எந்த நிலையிலும் கர்நாடக அரசின் நடவடிக்கையை தமிழக அரசு தடுக்கும். மேகதாது அணைக்கு அனுமதி வழங்கக் கூடாது என்று மத்திய அரசுக்கு எதிர்ப்பு தெரிவிக்கப்படும் என்று திட்டவட்டமாக கூறினார்.தமிழ்நாட்டின் காவிரி உரிமையை, உழவர் நலனும் நிச்சயமாக காக்கப்படும் என்றும் மேகதாது விவகாரத்தில் அனைவரும் ஒற்றுமையாக செயல்பட்டு வெல்வோம் என்றும் தெரிவித்தார். மேகதாது அணையைக் கர்நாடகம் கட்டுவதற்கு மத்திய அரசு அனுமதி தருவதை நிச்சயம் ஏற்றுக்கொள்ள முடியாது. அதை எந்தக் காரணத்தைக் கொண்டும் ஒத்துக்கொள்ள மாட்டோம் என்றார்.
நடுவர் மன்றத் தீர்ப்பிற்கும், உச்சநீதிமன்றம் அளித்துள்ள இறுதித் தீர்ப்பிற்கும் எதிராக கர்நாடக அரசு காவிரியின் குறுக்கே மேகதாது எனும் இடத்தில் அணை கட்ட தொடர்ந்து முயற்சி செய்து வருகிறது. ஆனால் கர்நாடக அரசு மேற்கொள்ளும் அனைத்து நடவடிக்கைகளையும், எந்தவித பாகுபாடுமின்றி தமிழ்நாடு அரசு நிச்சயம் தடுக்கும். மேலும் அணைக்கு அனுமதி அளிக்க கூடாது என மத்திய அரசுக்கு எதிர்ப்பு தெரிவிப்பதிலும், சட்டரீதியான நடவடிக்கைகள் எடுப்பதிலும் தமிழக அரசு உறுதியாக இருப்போம் என்று சூளுரைத்தார்.தமிழகத்தின் காவிரி உரிமையையும் உழவர்களின் நலனையும் நிச்சயம் பாதுகாத்திட, அணை கட்டக்கூடிய முயற்சிகளை இந்த அரசு எல்லா வடிவிலும் எதிர்க்கும் என்று பேசிய முதலமைச்சர் தமிழ்நாட்டு உரிமையில் நாம் அனைவரும் ஒன்றுபட்டு நின்றால், நிச்சயம் வெற்றி பெறுவோம் என்றார்.
முன்னதாக தீர்மானத்தை தாக்கல் செய்து அமைச்சர் துரைமுருகன் பேசியதாவது, அண்டை மாநிலங்களுடன் நல்லுறவை காக்க வேண்டும். ஆனால், அதே நேரத்தில் உரிமையை விட்டு கொடுக்கக்கூடாது. மத்தியில் யார் ஆட்சிக்கு வந்தாலும், தமிழகத்தை மாற்றாந்தாய் பிள்ளை போல் நடத்துகிறார்கள். தண்ணீருக்காக ஒரு பக்கம் கேரளாவுடனும், மறுபக்கம் கர்நாடகாவுடன் கையேந்தும் நிலையில் உள்ளது.நம்முடைய மகன், பேரன் வரை காவிரி போராட்டம் முடியாதோ என்ற சந்தேகம் எழுகிறது. காவிரி விவகாரத்தில் தோற்றோம் என்றால் வருங்கால தலைமுறையினர் நம்மை சபிக்கும்.
காவிரி பிரச்னை இரு மாநிலங்களுக்கு இடையிலான உணர்வுப்பூர்வமான பிரச்னை. காவிரி விவகாரத்தில் உச்சநீதிமன்றம் கடந்த 2018 பிப்., 16 அன்று அளித்த தீர்ப்பை மதிக்காமல் சம்பந்தப்பட்ட மாநில அனுமதியையும், மத்திய அரசு அனுமதியையும் பெறாமல் அணை கட்டும் முயற்சியை மேற்கொண்டு வரும் கர்நாடக அரசிற்கு தமிழக சட்டசபையின் கண்டனத்தை தெரிவித்து கொள்கிறோம். இந்த விவகாரத்தில், கர்நாடக அரசுக்கு எந்தவித தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் அனுமதியையும் தரக்கூடாது என மத்திய அரசை கேட்டு கொள்வதாக அவர் கூறினார்.
மேலும் படிக்க: தண்ணீருக்காக கையேந்துகிறோம்.. காவிரி போராட்டத்தில் தோற்றால்..? சட்டப்பேரவையில் அமைச்சர் துரைமுருகன் உருக்கம்