மருத்துவம் மற்றும் கிராமப்புற சுகாதார சேவைகள் இயக்குனராக டாக்டர் ஜெ. ராஜமூர்த்தி நியமிக்கப்பட்டுள்ளார்.
தமிழக அரசின் பல்வேறு துறைகளின் செயலாளர்கள் மற்றும் இயக்குனர்கள் மாற்றப்பட்டு வரும் நிலையில் மருத்துவம் மற்றும் கிராமப்புற சுகாதார சேவைகள் இயக்குனர் தற்போது மாற்றப்பட்டு உள்ளார். தமிழ்நாடு அரசு இதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
அதன்படி மருத்துவம் மற்றும் கிராமப்புற சுகாதார சேவைகள் இயக்குனராக டாக்டர் ஜெ. ராஜமூர்த்தி நியமிக்கப்பட்டுள்ளார். இவர் முதலமைச்சர் மு.க ஸ்டாலினின் மனைவி சகோதரர ஆவார்.
ராஜமூர்த்தி இதற்கு முன்பே தமிழக அரசு மருத்துவமனையில் பல்வேறு முக்கிய பொறுப்புகளை வகித்து வந்தார். தமிழக இஎஸ்ஐ மருத்துவமனைகளின் கூடுதல் இயக்குனராக இவர் இருந்து வந்தார். இந்த நிலையில் தான் அவருக்கு மருத்துவம் மற்றும் கிராமப்புற சுகாதார சேவைகள் இயக்குனர் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. ஆளுநரின் ஒப்புதலுடன் மக்கள் நல்வாழ்வு துறை செயலாளர் ககன் தீப் சிங் பேடி இந்த அறிவிப்பை வெளியிட்டார்.
ராஜமூர்த்திக்கு மாநிலத்தில் உள்ள அனைத்து தாலுகா மற்றும் மாவட்ட மருத்துவமனைகளின் பொறுப்பும் இருக்கும். இவர் வகித்து வந்த டி.எம்.எஸ், இஎஸ்ஐ மருத்துவமனைகள் பொறுப்பு டாக்டர் இளங்கோவன் மாற்றப்பட்டுள்ளார்.
தமிழ்நாட்டில் ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள், அரசுத்துறை இயக்குனர்கள் உள்ளிட்டோர் தொடர்ந்து மாற்றப்படுவது வழக்கமான ஒன்று தான். அந்த வகையில் மக்களவை தேர்தல் முடிவுகள் சமீபத்தில் வெளியான நிலையில் ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் மாற்றப்பட உள்ளதாக தொடர்ந்து தகவல் வெளியான வண்ணம் உள்ளன.
அதன்படி தமிழ்நாட்டை சேர்ந்த 2 முக்கிய ஐஏஎஸ் அதிகாரிகள் மத்திய அரசின் பணிக்கு டெல்லி செல்ல உள்ளதாக கூறப்படுகிறது. தமிழ்நாட்டில் முக்கிய செயலாளர்களாக இருக்கும் 2 அதிகாரிகளும் டெல்லிக்கு அழைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.