திருச்செந்தூர் முருகன் கோவிலுடன் கும்பமேளாவை ஒப்பிட்ட முதல்வர் ஸ்டாலின் போட்ட பதிவை நீங்களே பாருங்கள்!

Published : Jul 08, 2025, 03:39 PM IST
mk stalin

சுருக்கம்

திருச்செந்தூர் திருக்கோயிலில் ஜூலை 7ம் தேதி குடமுழுக்கு விழா கோலாகலமாக நடைபெற்றது. தமிழ்நாடு அரசின் சிறப்பான ஏற்பாடுகளுடன் லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று மகிழ்ச்சியுடன் தரிசனம் செய்தனர்.

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழிகாட்டுதலுடன், திருச்செந்தூர் திருக்கோயிலில் குடமுழுக்கு விழா ஜூலை 7ம் தேதி திங்கள்கிழமை காலை 6.50 மணியளவில் கோலாகலமாக நடைபெற்றது. இந்த குடமுழுக்குவிழா தமிழ்நாடு அரசின் அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர் பாபு, மீன்வளத்துறை அமைச்சர் அனிதா இராதாகிருஷ்ணன் ஆகியோர் முன்னிலையில் தமிழ் மறைகள் முழங்கிட தருமபுர ஆதினம், மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சாமிகள், சிருங்கேரி சாரதா பீடாதிபதி சாமிகள் முதலானோர் சூழ வெகு சிறப்பாக நடைபெற்றது.

திருச்செந்தூர் முருகன் கோயில்

திருச்செந்தூரின் கடலோரத்தில் கூடிய கூட்டம் தலையா, கடல் அலையா என ஒரு திரைப்படத்தில் வரும் பாடல் வரிகள் தமிழ்நாட்டின் மூலை முடுக்கில் எல்லாம் பல ஆண்டுகளாக முழங்கி வருவதை எவரும் மறந்திட முடியாது. அந்த அளவுக்கு திருச்செந்தூர் கோயிலைச் சூழ்ந்த நாற்புறங்களிலும், கடலோரத்தில் மணலே தெரியாத அளவுக்கு இலட்சக் கணக்கான மக்கள் கூடியிருந்த காட்சிகளை அங்கிருந்தவர்கள் மட்டுமல்ல, தொலைக்காட்சி வழியாக குட முழுக்கு விழாவைப் பார்த்து மகிழ்ந்த மக்கள் அனைவரும் கண்டு மகிழ்ச்சியில் திளைத்தனர். திருச்செந்தூர் கோயில் குடமுழுக்கு விழாவை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் ஆலோசனையின்படி, அறநிலையத்துறை அமைச்சர் அவர்களால், அறநிலையத்துறை அதிகாரிகளின் துணையோடு திருச்செந்தூரிலேயே முகாமிட்டு நன்கு திட்டமிட்டு நடத்தப்பட்டுள்ளது. தமிழ்நாடு முழுவதிலுமிருந்து வருகைபுரிந்த இறையன்பர்கள் எல்லோரும் குடமுழுக்கு விழாவைக் கண்டு மனநிறைவோடு – மகிழ்ச்சியோடு ஊர் திரும்பியுள்ளனர்.

தமிழ்நாடு அரசுக்கும், முதலமைச்சருக்கும் பாராட்டு

திருச்செந்தூர் குடமுழுக்கு விழாவிற்காக திராவிட மாடல் அரசின் அருமையான முன்னேற்பாடுகளை குறிப்பாக அனைத்து மாநிலங்களிலிருந்தும் சிறப்புப் பேருந்து வசதிகள், தங்குமிட வசதிகள், திரும்பிய இடமெல்லாம் அன்னதானங்கள் என அனைத்தையும் கண்டு மகிழ்ந்த பொதுமக்கள் மலைத்துப்போய் தமிழ்நாடு அரசையும், முதலமைச்சர் அவர்களையும் பாராட்டினர். தமிழ்நாடு முதலமைச்சர் திருச்செந்தூர் குடமுழுக்கு விழாவிற்கு வருகை தந்த பொதுமக்களின் பாதுகாப்பிற்காக அமைச்சர் பெருமக்கள், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர், காவல்துறை கண்காணிப்பாளர் ஆகியோரிடம் தேவையான வசதிகளைச் செய்துதர அறிவுரைகள் வழங்கினார்கள்.

முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள், திராவிட முன்னேற்றக் கழக மாநாடுகள், மாநில அளவிலான சிறப்புப் பொதுக் கூட்டங்கள் என எது நடத்தினாலும், வருகை புரிந்த தொண்டர்கள் அனைவரின் நலனிலும் தனிக்கவனம் செலுத்துவார்கள். தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் நிகழ்ச்சிக்காக வருகை புரிந்தவர்களை நோக்கி, நீங்கள் அத்துணைபேரும் பத்திரமாக உங்கள் ஊருக்கும், வீடுகளுக்கும் திரும்பிச் சென்றுவிட்டீர்கள் என்ற செய்தி எனக்குக் கிடைத்த பிறகுதான் நான் நிம்மதி அடைவேன் என்று கூறுவார்கள். அதுபோலவே, தமிழ்நாடு முதலமைச்சர் திருச்செந்தூர் கோயில் குடமுழுக்கு விழாவைக் காண வந்த மக்கள் அனைவரும் பத்திரமாகத் திரும்பி ஊர் சென்று அவரவர் வீடுகளைச் சென்றடைவதற்குத் தேவையான வசதிகளைச் செய்திட உத்தரவு பிறப்பித்தார்கள்.

குடமுழுக்கு விழாவில் 15 இலட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள்

அந்த உத்தரவை தலைமேற்கொண்டு அமைச்சர் பெருமக்களும், மாவட்ட நிர்வாகமும், காவல்துறை அதிகாரிகளும் இரவு பகல் பாராமல் முறையாகத் திட்டமிட்டு, குடமுழுக்கு விழாவை மிக மிகச் சிறப்பாக நடத்தி முடித்துள்ளார்கள். எந்த இடத்திலும் மக்கள் சிரமப்படவில்லை. திருச்செந்தூர் குடமுழுக்கு விழாவிற்கு தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் வருகைபுரிந்த ஏறத்தாழ 15 இலட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் குடமுழுக்கு விழாவில் பங்கேற்று பக்திப் பரவசத்துடன் தங்கள்தங்கள் ஊர்களுக்கும் வீடுகளுக்கும் சென்று சேர்ந்துள்ளார்கள். 

திராவிட மாடல்

இலட்சக் கணக்கான மக்கள் கூடிய திருச்செந்தூர் திருமுருகன் திருக்கோயில் குடமுழுக்கு விழாவுடன், வடபுலத்தில் நடைபெற்ற கும்பமேளாவை ஒப்பிட்டால், அப்பப்பா, எத்தனை எத்தனை பேர் அங்கு மடிந்தனர். எவ்வளவு பெரிய தீ விபத்துகள் அங்கே நிகழ்ந்தன. எவ்வளவு குடும்பங்கள் அங்கே பாதிக்கப்பட்டன. கும்பமேளாவிற்கு வருகை தந்த மக்கள் டெல்லி உட்பட பல இரயில் நிலையங்களில் எவ்வளவு பிரச்சினைகளைச் சந்தித்தனர். எத்தனை கொடுமைகள் நிகழ்ந்தன. அவற்றை எல்லாம் எண்ணிப் பார்க்கும்போது, எத்தனை இலட்சம் பேர் வந்தால் என்ன, அவர்கள்அத்துனை பேரின் நலன்களையும் பாதுகாப்பையும் உறுதி செய்து, நன்கு திட்டமிட்டு, திருச்செந்தூர் திருமுருகன் திருக்கோயில் குடமுழுக்கு விழாவை மக்கள் பாராட்டும் வகையில் நடத்தி வெற்றி கண்டுள்ள திராவிட மாடல் அரசின் நாயகரும், அவரது அமைச்சர்கள், அதிகாரிகள் முதலானோரும் என்றும் எல்லோருக்கும் முன்னோடிகள் அல்லவா என தெரிவித்துள்ளார்.

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

விடாது கருப்பு..! துவண்டு கிடந்த ஓ.பி.எஸுக்கு துணிச்சல் கொடுத்த அமித் ஷா..! அதிமுவில் மீண்டும் அதிகார ஆடுபுலி ஆட்டம்..!
திமுகவினர் என்னை இழிவாக பேசினார்கள்..! விஜய் நான் உங்கள் ரசிகன் என்றார்..! நாஞ்சில் சம்பத் பேட்டி!