
தமிழ்நாட்டில் ஏழு இடங்களில் தொல்லியல் அகழாய்வுகள் நடத்தப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். அண்மைக்காலமாக, கீழடி, அழகன்குளம், கொற்கை, சிவகளை, ஆதிச்சநல்லூர், கொடுமணல், மயிலாடும்பாறை, கங்கைகொண்ட சோழபுரம் உள்ளிட்ட இடங்களில் அகழாய்வுகள் மேற்கொள்ளப்பட்டன. இந்த அகழாய்வுகள் தமிழகத்தின் தொன்மையைப் புதிய காலக்கணிப்பு மூலம் பல நூற்றாண்டுக் காலத்திற்கு முன்னோக்கி எடுத்துச் சென்றுள்ளது என்றால் அது மிகையாகாது. கீழடி அகழாய்வு மற்ற அகழாய்வுகளுக்கு முன்னோடி அகழாய்வாகத் திகழ்கிறது. இதுவரை கங்கைச் சமவெளியில் கி.மு. ஆறாம் நூற்றாண்டிலிருந்த நகரமயமாக்கம் தமிழ்நாட்டில் இல்லை என்றும், பிராமி எழுத்து மௌரியர் தோற்றுவித்தது என்றும் கருதுகோள்கள் இருந்தன. அத்தகைய கருதுகோள்களுக்கு அறிவியல் பூர்வமாக விடை அளித்துள்ளது கீழடி அகழாய்வு.
தமிழ்நாட்டில் கி.மு. ஆறாம் நூற்றாண்டிலேயே நகரமயமாக்கம் ஏற்பட்டிருந்தது என்பது மட்டுமல்லாமல் படிப்பறிவும் எழுத்தறிவும் பெற்ற மேம்பட்ட சமூகமாக விளங்கியதை கீழடி அகழாய்வு நிலை நிறுத்தியுள்ளது. இந்த நிலையில் தமிழ்நாட்டில் ஏழு இடங்களில் தொல்லியல் அகழாய்வுகள் நடத்தப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். இதுகுறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிவிப்பில், தமிழின் தொன்மையையும், தமிழரின் பண்பாட்டையும் அறிவியல்பூர்வமாக நிறுவ வேண்டுமானால் முறையான அகழாய்வுகள் அவசியமாகும் எனக் குறிப்பிட்டுள்ளார். பண்டைத் தமிழ்ச் சமூகத்தின் தொன்மை, பண்பாடு மற்றும் விழுமியங்களுக்குப் பெருமை சேர்க்கும் வகையில் கீழடி, சிவகளை, கங்கை கொண்ட சோழபுரம், மயிலாடும்பாறை, வெம்பக்கோட்டை, துலுக்கர்பட்டி, பெரும்பாலை ஆகிய ஏழு இடங்களில் அகழாய்வுகள் செய்யப்படவுள்ளன.
இதில் கீழடியில் 8 ஆம் கட்ட அகழாய்வும், சிவகளையில் 3 ஆம் கட்ட அகழாய்வும், கங்கைகொண்ட சோழபுரம், மயிலாடும்பாறையில் 2 ஆம் கட்ட அகழாய்வும் நடத்தப்படும் எனவும், வெம்பக்கோட்டை, துலுக்கர்பட்டி, பெரும்பாலையில் முதற்கட்ட அகழாய்வு மேற்கொள்ளப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. சங்ககாலக் கொற்கைத் துறைமுகத்தின் தொல்லியல் வளத்தினைக் கண்டறிய கடலோரங்களில் ஆய்வினை மேற்கொள்ள இந்தியக் கடலாய்வு பல்கலைக்கழகம் மற்றும் தேசிய கடல்சார் தொழில்நுட்ப நிறுவனம் ஆகியவற்றுடன் இணைந்து கடல் ஆய்வு மேற்கொள்ளத் திட்டமிடப்பட்டுள்ளதாகவும், அகழாய்வுப் பணிகள் வரும் பிப்ரவரி மாதம் முதல் வாரத்தில் தொடங்கி செப்டம்பர் மாதம் இறுதி வரை நடைபெறும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.