
சேலம்
ஸ்டெர்லைட் துப்பாக்கி சூடு சம்பவத்தை கண்டித்து தமிழ்நாடு மக்கள் மேடை அமைப்பினர் சேலத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது முதல்வர் பழனிச்சாமியின் உருவப்படத்தை தீ வைத்து எரித்தனர்.
தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போராடியவர்கள் மீது காவலாளர்கள் துப்பாக்கி சூடு நடத்தியதில் இதுவரை 12 பேர் கொல்லப்பட்டார்கள்.
இந்தச் சம்பவத்தை கண்டித்து சேலம் மாவட்டம், பழைய பேருந்து நிலையம் அருகே உள்ள தலைமை தபால் நிலையம் முன்பு தமிழ்நாடு மக்கள் மேடை அமைப்பு சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இதற்கு சி.ஐ.டி.யு. மாவட்ட செயலாளர் உதயகுமார் தலைமை தாங்கினார். ஏ.ஐ.டி.யு.சி. மாவட்ட பொதுச்செயலாளர் முனுசாமி, செயலாளர் விமலன், ஜனநாயக வாலிபர் சங்க மாவட்ட செயலாளர் பிரவீன்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இந்த ஆர்ப்பாட்டத்திற்கு முன்னதாக மக்கள் மேடை அமைப்பை சேர்ந்தவர்கள் சேலம் கோட்டை மைதானத்திற்கு திரண்டு வந்தனர். பின்னர் அவர்கள் அங்கிருந்து கோட்டை பகுதி வழியாக ஊர்வலமாக பழைய பேருந்து நிலையம் அருகே உள்ள தலைமை தபால் நிலையம் வந்தனர். ஊர்வலத்தில் பங்கேற்றவர்கள் கோரிக்கை அட்டையை கழுத்தில் அணிந்திருந்தனர். பின்னர் அவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது, "மக்களுக்கு தீங்கு விளைவிக்கும் ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட வேண்டும்.
கலவரத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உரியநீதி வழங்க வேண்டும்.
துப்பாக்கி சூடு நடத்தியது மிகவும் கண்டிக்கத்தக்கது.
கிராமப்புற பெண்களுக்கு 100 நாள் வேலையை உறுதிப்படுத்த வேண்டும்.
பெண்கள், பெண் குழந்தைகள் மீதான பாலியல் வன்கொடுமைகளை தடுத்து நிறுத்த வேண்டும்.
பெட்ரோல், டீசல் விலை அதிகரிப்பால் விலைவாசி உயர்வை தடுக்க வேண்டும்.
மத்திய அரசு வேலையில்லைா திண்டாட்டத்தை குறைக்க வேண்டும்.
அமைப்பு சாரா தொழிலாளர்களை தொடர்ந்து வஞ்சித்து நலவாரியங்களை நீர்த்து போக செய்யக்கூடாது" போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினர்.
இந்த ஆர்ப்பாட்டத்தின்போது முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியின் உருவப்படத்துக்கு தீ வைக்கப்பட்டது. ஆர்ப்பாட்டத்திற்கு பின்னர் அவர்கள் தாமாகவே கலைந்து சென்றனர்.