கீழடி அகழ்வாராய்ச்சி பொருட்களுக்காக பிரத்யேகமாகக் கட்டப்பட்டுள்ள கீழடி அருங்காட்சியகத்தை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று திறந்து வைத்தார்.
சிவகங்கை மாவட்டம் கீழடியில் ரூ.18 கோடியே 48 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டுள்ள அகழாய்வு அருங்காட்சியகத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று திறந்து வைத்தார். இதனைத் தொடர்ந்து அவர் வெளியிட்டுள்ள சமூக வலைதளப்பதிவில், “மனிதகுலத்தின் தொல்நாகரிக இனமாம் நம் தமிழினத்தின் பழம்பெருமையை விளக்கும் கீழடி அருங்காட்சியகத்தைத் திறந்து வைக்கும் பெரும் பேற்றை நான் பெற்றேன்.
ஆற்றங்கரை நாகரிகத்தின் ஆதிமுகமான வைகைக் கரையில் அமைந்திருந்த நகரத்தின் வயது 2,600 ஆண்டுகள். அகழாய்வில் அகலமாய்த் தோண்டத் தோண்ட எண்ணிலடங்காப் புதையல்களை எடுத்து வருகிறோம். கல் மணிகள் முதல் தங்க அணிகலன்கள் வரை கிடைத்திருக்கிறது.
பழந்தமிழ் இலக்கியங்கள், கல்வெட்டுகள் துணையோடு நாம் பேசிவந்த அனைத்துக்கும் மேலும் அசைக்கமுடியாச் சான்றுகள் கிடைத்த இடம் கீழடி. இவை அனைத்தையும் அருங்காட்சியகமாக ஆக்கி வைத்திருக்கிறது நமது தமிழ்நாடு அரசு.
அசுர வேகத்தில் சென்ற கார் மோதி தூக்கி வீசப்பட்ட காவல் அதிகாரி படுகாயம்
ஈராயிரம் ஆண்டுக்கும் முந்தைய தமிழர் வரலாற்றின் சின்னமாகக் கீழடி அருங்காட்சியகம் அமைக்கப்பட்டுள்ளது. அனைவரும் வந்து பார்க்கும் காட்சியகமாக அமைந்துள்ளது. காலத்தே பல நூறு ஆண்டுகளுக்குப் பின்னால் அழைத்துச் செல்லப் போகிறது. வரலாறு படிப்போம். வரலாறு படைப்போம்” என்று குறிப்பிட்டுள்ளார்.