
திருப்பூர்,
முதலமைச்சர் ஜெயலலிதாவின் உடல்நலக் குறைவு எதிரொலியாக திருப்பூரில் கடைகள், பெட்ரோல் பங்குகள் அடைக்கப்பட்டன. மேலும் திருப்பூரில் காவலாளர்கள் பாதுகாப்பு போடப்பட்டுள்ளன.
முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு மாரடைப்பு ஏற்பட்ட தகவலை சென்னை அப்பல்லோ மருத்துவமனை நிர்வாகம் ஞாயிற்றுக்கிழமை மாலை திடீரென அறிவித்தது.
இதனைத் தொடர்ந்து அ.தி.மு.க. தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் மிகுந்த கவலை அடைந்தனர். ஜெயலலிதாவின் உடலை நிலை எதிரெலியாக திருப்பூரில் நேற்று இரவில் பதற்றம் ஏற்பட்டது.
வழக்கத்துக்கு மாறாக இரவு 9 மணிக்கே கடைகளை அடைக்க தொடங்கினார்கள். இரவு நேர சாலையோர டிபன் கடைகள் அவசர, அவசரமாக எடுத்து வைக்கப்பட்டன. ஒருசில இடங்களில் பெட்ரோல் விற்பனை நிலையங்கள் மூடப்பட்டன. பெட்ரோல் நிலையங்களில் வாகனங்களுக்கு பெட்ரோல், டீசல் நிரப்ப கூட்டம் அலைமோதியது.
திருப்பூர் மாவட்டத்திலும், மாநகரிலும் காவலாளர்கள் எச்சரிக்கப்பட்டு உள்ளனர். விடுப்பில் சென்ற காவலாளர்கள் அனைவரும் மீண்டும் பணிக்கு வரவழைக்கப்பட்டனர்.
மேலும், திருப்பூர் மாநகர மற்றும் மாவட்ட ஆயுதப்படை காவலாளர்கள் தயார் நிலையில் இருந்தனர். வழக்கமாக திருப்பூர் புதிய மற்றும் பழைய பேருந்து நிலையங்களில் அதிகாலை புறப்படும் பேருந்துகள் இரவு நேரங்களில் நிறுத்தப்பட்டு இருக்கும்.
அந்த பேருந்துகளை பாதுகாப்பு கருதி காவலாளர்கள் பணிமனைகளுக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும், புதிய பேருந்து நிலையத்தில் இருந்து வெளியூர் செல்லும் பேருந்துகளை பத்து, பத்து பேருந்துகளாக காவலாளர்கள் பாதுகாப்புடன் அனுப்பி வைக்கப்பட்டன.
மேலும், வெளியூர் செல்லும் பேருந்துகளின் எண்ணிக்கையும் குறைக்கப்பட்டன. இந்த மாவட்டத்தில் எந்தவித அசம்பாவித சம்பவங்களும் ஏற்படாத வண்ணம் நள்ளிரவு முழுவதும் காவலாளர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.