
மதுரை செல்வதற்காக சென்னை விமான நிலையத்திற்கு வந்த முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி 5 நிமிடங்களுக்கு மேல் லிப்ட்டில் சிக்கித் தவித்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தேவர் குரு பூஜையில் கலந்து கொள்வதற்காக விமானம் மூலம் மதுரை செல்ல நேற்று இரவு சென்னை விமான நிலையத்துக்கு சென்றார். இரவு 7 மணிக்கு வந்த அவர், விமான நிலையத்தில் உள்ள விஐபி அறையில் இருந்தார்.
பின்னர் விமானத்தில் ஏறுவதற்காக எடப்பாடி பழனிசாமி 3-வது தளத்தில் இருந்து லிப்ட் மூலம் கீழே இறங்கிக்கொண்டு இருந்தார். அவருடன் செயலாளர்கள், பாதுகாப்பு அதிகாரிகளும் ‘லிப்ட்’டில் வந்தனர்.
இந்த லிப்ட் 2-வது தளத்திற்கு வந்தபோது திடீரென பழுதாகி பாதி வழியில் நின்றது. இதனால் முதலமைச்சர் வெளியே வரமுடியாத நிலை ஏற்பட்டது. இதனால் விமான நிலைய அதிகாரிகள் மற்றும் பணியாளர்கள் மத்தியில் அதிர்ச்சி ஏற்பட்டது. மேலும் முதலமைச்சருடன் வந்த அதிகாரிகளும் அதிர்ச்சி அடைந்தனர்.
இதையடுத்து லிப்ட் பழுது பார்க்கும் ஊழியர்கள் உடனடியாக அங்கு வரவழைக்கப்பட்டு பழுதடைந்த ‘லிப்ட் கதவை திறந்து எடப்பாடி பழனிசாமியை மீட்டனர். லிப்டில் ஏற்பட்ட இந்த திடீர் பழுதால் எடப்பாடி பழனிசாமி 5 நிமிட நேரம் லிப்ட்டில் சிக்கித் தவித்தார்.
பின்னர் 2-வது தளத்தில் இருந்து அவர் கீழே நடந்து வந்தார். பிறகு கார் மூலம் விமான நடைமேடை 28-ல் நின்றிருந்த விமானத்திற்கு சென்றார். இதனால் இரவு 7.30 மணிக்கு செல்ல வேண்டிய விமானம் 15 நிமிடங்கள் தாமதமாக புறப்பட்டு சென்றது.
ஏற்கனவே விமான நிலையத்தின் மேற்கூரை அடிக்கடி உடைந்து விழுந்து வரும் சிலையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, லிப்டில் சிக்கிய சம்பவம் பொது மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.