
எனது சாவுக்குப் பிறகாவது டாஸ்மாக் கடைகளை மூட வேண்டும் என்றும் இல்லையென்றால் ஆவியாக வந்து டாஸ்மாக் கடைகளை உடைப்பேன் என்று பிரதமர், முதல்வருக்கு கடிதம் எழுதி வைத்து விட்டு +2 மாணவன் ஒருவன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் நெல்லையில் நடந்துள்ளது.
நெல்லை, சங்கரன்கோவில் அடுத்த குருக்கள்பட்டியைச் சேர்ந்தவர் மாடசாமி. இவருக்கு தினேஷ் நல்லசிவன் என்ற மகன் உள்ளார். தினேஷ் 12 ஆம் வகுப்பு\ படித்து வருகிறார். இந்த நிலையில் மாடசாமி தினமும் குடித்துவிட்டு வீட்டில் தகராறு செய்து வந்துள்ளார். அது மட்டுமல்லாமல், மாடசாமி குடித்துவிட்டு, சுற்றியுள்ளவர்களிடம் அவப்பெயர் ஏற்படும் வகையில் நடந்து கொண்டுள்ளார். இதனால் தினேஷ் மன உளைச்சலுக்கு ஆளாகி இருந்துள்ளார்.
இந்த நிலையில், நேற்று மாலை வீட்டுக்கு குடித்துவிட்டு வந்து தகராறில் ஈடுபட்ட தந்தையுடன் கோபித்துக் கொண்டு வீட்டைவிட்டு வெளியேறினார். மன உளைச்சலில் இருந்த தினேஷ், நெல்லை வண்ணாரப்பேட்டை தெற்கு புறவழி சாலை ரயில்வே மேம்பாலத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இந்த நிலையில் இன்று காலையில் அந்த வழியாக நடைப்பயிற்சி மேற்கொண்டவர்கள், தினேஷ் சடலமாக தொங்கிக் கொண்டிருப்பதை கண்டு, பாளையங்கோட்டை போலீஸ் நிலையத்துக்கு தகவல் கொடுத்தனர்.
பின்னர் அங்கு வந்த போலீசார், தினேஷின் உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக, அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தினேஷ் வைத்திருந்த பை ஒன்றை போலீசார் சோதனையிட்டனர். அதில், தினேஷ் எழுதிய கடிதம் ஒன்று இருந்தது. மேலும், நீட் தேர்வு எழுதுவதற்கான அடையாள அட்டை அனுமதி சீட்டு, 10 ஆம் வகுப்பு மதிப்பெண் பட்டியலும் இருந்தது.