
நாகப்பட்டினம்
அரசு நிலங்களிலிருந்து தேவையான களி மண்ணை எடுத்துக் கொள்வதற்கு சிறப்பு சலுகைகள் அளிக்க வேண்டும் என நாகை மாவட்ட ஆட்சியர் சு.பழனிச்சாமியிடம், மண்பாண்டத் தொழிலாளர்கள் கோரிக்கை மனு அளித்தனர்.
நாகை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று மக்கள் குறைதீர் கூட்டம் நடைபெற்றது.
இந்தக் கூட்டத்தில் தமிழ்நாடு மண்பாண்டத் தொழிலாளர்கள் சங்கம் சார்பில் மனு ஒன்று அளிக்கப்பட்டது.
அந்த மனுவில்:
“தமிழகத்தில் மண்பாண்டத் தொழில் செய்யும் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் சுமார் 40 இலட்சம் பேர் இருக்கின்றனர்.
மண்பாண்டம், செங்கல் சொரு ஓடு, மண் பழுப்பு, டெரக்கோட்டா கல்நார் கலந்த களிமண் ஆகியவற்றைக் கொண்டு பொம்மைகள் மற்றும் வீட்டு உபயோகப் பொருள்கள் செய்வதே இத் தொழிலாளர்களின் பணி.
இதில், சுமார் 4 இலட்சத்துக்கும் அதிகமானோர் களி மண்ணை மட்டுமே மூலப் பொருளாகக் கொண்ட தொழிலில் ஈடுபட்டு உள்ளனர்.
மண்பாண்டத் தொழிலுக்கு ஆதரவு அளிக்கும் வகையில், “அரசு நிலங்களிலிருந்து தேவையான களி மண்ணை மண்பாண்டத் தொழிலாளர்கள் எடுத்துக் கொள்வதற்கு சிறப்பு சலுகைகள் அளிக்க வேண்டும்.
மண்பாண்டத் தொழிலாளர்களுக்கான மழைக்கால பராமரிப்பு உதவித் தொகையை ரூ.5 ஆயிரமாக உயர்த்தி வழங்க வேண்டும்.
மண்பாண்டத் தொழிற்கூடங்கள் அமைக்க மானியம் வழங்க வேண்டும்.
மண்பாண்டத் தயாரிப்புக்கு சீலா வீல் மின்சக்கரம் வழங்க வேண்டும்” என்று கேட்டுக் கொள்கிறோம்” என்று அந்த மனுவில் குறிப்பிடப்பட்டு உள்ளது.
அதனைப் பெற்றுக் கொண்ட ஆட்சியர் அதற்கு உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார்.