புதுச்சேரியில் பள்ளி வளாகத்திற்குள் வெவ்வேறு அரசுப் பள்ளி மாணவிகள் மோதிக் கொண்டது தொடர்பான வீடியோ தற்போது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
புதுச்சேரியில் உள்ள சுப்பிரமணிய பாரதியார் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் சுமார் 500க்கும் மேற்பட்ட மாணவிகள் படித்து வருகின்றனர். இந்நிலையில் பள்ளியின் கட்டிடம் பழமையானது என்பதால் சீரமைப்பதற்காக அங்கு படித்து வரும் மாணவிகள் அனைவரும் குருசுகுப்பம் பகுதியிலுள்ள என்.கே.சி அரசு மேல்நிலைப்பள்ளிக்கு மாற்றம் செய்யப்பட்டனர்.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, என்.கே.சி பள்ளி மாணவிகள் போராட்டத்தில் ஈடுபட்டதாக சொல்லப்படுகிறது. தொடர்ந்து பள்ளி நிர்வாகம் மற்றும் கல்வித் துறை அதிகாரிகள் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி சமாதானப்படுத்தியுள்ளனர். இதனையடுத்து மாணவிகள் தங்களது போராட்டத்தை கைவிட்டதாக சொல்லப்படுகிறது.
மேலும் படிக்க:தேர்வர்களே அலர்ட் !! முதுகலை பட்டதாரி ஆசிரியர் நியமனம்.. 15 பாடங்களுக்கான தேர்வு பட்டியல் வெளியீடு..
இந்த நிலையில், இன்று காலை வழக்கம் போல் மாணவர்கள் பள்ளிக்கு வந்துள்ளனர். அப்போது பள்ளி வளாகத்திற்குள்ளே இரு அரசுப் பள்ளி மாணவிகளுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. பள்ளிக்கு மாணவிகளை விட வந்த பெற்றோர்களும் உள்ளே வந்து தகராறில் ஈடுபட்டதாகவும் மாணவிகளை தாக்கியதாகவும் கூறப்படுகிறது. இதனை கண்டித்து என்.கே.சி பள்ளி மாணவிகள் போராட்டத்தில் ஈடுபட்டதால், பிரச்சனை பூதாகரமானது.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த முத்தியால்பேட்டை காவல் ஆய்வாளர் மற்றும் கல்வித்துறை இணை இயக்குனர் உள்ளிட்டோர் போராட்டத்தை கலைத்து மாணவிகளை வகுப்பிற்கு அனுப்பி வைத்தனர். மேலும் மாணவிகளின் பெற்றோர்களுக்கு அறிவுரை வழங்கி, வெளியே அனுப்பி வைத்தனர். இதனிடையே பள்ளிகல்வித்துறை அமைச்சர் லட்சுமி நாராயணன் சம்பந்தப்பட்ட பள்ளி வந்து விசாரணை நடத்தினார்.
மேலும் படிக்க:புளிய மரத்தில் மோதிய கார்.. சம்பவ இடத்திலேயே தம்பதி ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து பலி..!
அப்போது அவர்,பள்ளிக் கட்டிடம் இல்லாததால் தற்காலிகமாக இங்கு மாற்றப்பட்டுள்ள வேறு அரசுப்பள்ளி மாணவிகளை ஏற்றுக்கொள்ள வேண்டும். தேவையின்றி ஆசிரியர்கள் மற்றும் மாணவிகள் பிரச்சனை செய்யக்கூடாது என எச்சரித்தார். தொடர்ந்து மோதல் ஏற்படும் சூழல் இருந்ததால் இரண்டு பள்ளிகளுக்கும் நான்கு நாள்கள் விடுமுறை அளித்து உத்தரவிடப்பட்டுள்ளது. இரு பள்ளி மாணவிகளிடையே ஏற்பட்ட மோதல் தொடர்பான வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.