
கரூர் மாவட்டத்தில் தவெக தலைவர் விஜய் நடத்திய பிரசார கூட்டத்தில் சிக்கி குழந்தைகள், பெண்கள் உட்பட 41 பேர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் தமிழகம் மட்டுமல்லாது நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. இச்சம்பவத்திற்கு பின்னர் விஜய்யை எதிர்க்கக்கூடியவர்களின் குரல் அதிகரித்தது. குறிப்பாக திமுக மற்றும் அதன் கூட்டணிக்கட்சி நிர்வாகிகளின் குரல் விஜய்க்கு எதிராக அதிக சத்தத்துடன் எழுப்பப்படுகிறது.
அந்த வகையில் மூத்த பத்திரிகையாளர்களில் ஒருவரான நக்கீரன் கோபாலும் விஜய்யை கடுமையாக சாடத் தொடங்கி உள்ளார். கரூர் துயர சம்பவத்திற்கு பின்னால் அவர் வெளியிட்ட வீடியோவில் வேட்டுமென்றே விஜய் தாமதமாக வந்தது தான் விபத்துக்கு காரணம். தனது பிரசார வாகனத்தில் விளக்கை அனைத்து விளையாடியவாறு அவர் வந்தார். மேலும் பிரசாரம் மேற்கொள்ளும் இடத்திற்கு சில கிமீ தொலைவில் அவர் வாகனத்திற்குள் சென்றுவிட்டார். அதனால் அவரைப் பார்க்க வேண்டும் என்ற ஆர்வத்தில் வாகனத்தின் பின்னால் பெரும்பாலானோர் வந்துள்ளனர்.
மேலும் விஜய் நடிக்கும் ஜனநாயகன் படத்திற்கு தேவையான காட்சிகள் கரூர் கூட்ட நெரிசல் சம்பவத்தின் போது படமாக்கப்பட்டதாகவும் கூறி பகீர் கிளப்பினார். அதுமட்டுமின்றி கோபத்தின் உச்சத்திற்கே சென்ற நக்கீரன் கோபால் விஜய் மட்டும் கையில கிடைத்தால் அவன் சட்டைய புடிச்சி அடிப்பேன் என்று கூறி பரபரப்பை ஏற்படுத்தினார்.
இதனால் ஆத்திரமடைந்த விஜய் ரசிகர்கள், தவெக தொண்டர்கள் நக்கீரன் கோபாலுக்கு எதிராக இணையத்தில் மீம்ஸ்களைப் பகிரத் தொடங்கின. மேலும் அண்மையில் பொதுக்குழு கூட்டத்தில் பேசிய கட்சியின் பிரசார மேலாண்மை இயக்குநர் ஆதவ் அர்ஜூனா தைரியம் இருந்தால் என் தலைவன் மீது கை வைடா பார்ப்போம். பத்திரிகைகாரன் என்றால் என்ன வேண்டுமானாலும் பேசுவாயா? முடிந்தால் என் தலைவனின் வீட்டிற்குள் சென்று பார் என சவால் விடுத்தார்.
இந்நிலையில் நக்கீரன் கோபால் தனியார் யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டி ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில், “தொண்டனாகிய நீ என்னை அடிக்க அடிக்க உன் தலைவனை சும்மாவிட மாட்டேன். நான் முன்வைக்கும் கருத்துகளுக்கு கருத்தால் பதில் சொல்ல தெரியவில்லை. இதையெல்லாம் கண்டு பின்வாங்கும் நபரும் நான் இல்லை. கரூர் சம்பவத்தில் செந்தில்பாலாஜி சதி செய்துவிட்டதாக சொல்கிறார்கள். அப்படி அவர் உண்மையாகவே சதி செய்திருந்தால், அதிமுக முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் அவரை சும்மா விடமாட்டார்” என்று தெரிவித்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.