கிருஸ்தவர்களின் முக்கிய பண்டிகையான கிறிஸ்துமஸ் நேற்று நள்ளிரவு தொடங்கிய சிறப்பு பிரார்த்தனையுடன் தமிழகம் முழுவதும் உற்சாகமாக கொண்டாடப்பட்டு வருகிறது.
இயேசு கிருஸ்து அவதரித்த தினமான டிசம்பர் 25ம் தேதி கிறிஸ்துமஸ் பண்டிகையாக உலகம் முழுவதும் உள்ள கிருஸ்தவர்கள் கொண்டாடி வருகின்றனர். அதன்படி, தமிழகம் முழுவதும் நேற்று நள்ளிரவு முதலேயே சிறப்பு பிரார்த்தனைகளுடன் கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்கள் களைகட்டி வருகிறது. இன்று கிருஸ்துமஸ் பண்டிகை கொண்டாடப்படுவதை ஒட்டி தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள தேவாலயங்களில் சிறப்பு பிரார்த்தனைகள் நடத்தப்படுகின்றன.
தேவாலயங்களில் பல வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு ஏராளமான மக்கள் கூடி இருக்கின்றனர். இரவு 11 மணி முதல் அதிகாலை 2 வரை இந்த சிறப்பு பிரார்த்தனை நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கின்றன. சென்னை பெசன்ட் நகரில் அமைந்துள்ள அன்னை வேளாங்கண்ணி ஆலயம் பரங்கி மலையில் அமைந்துள்ள மாதா ஆலயம் பாரிமுனை அந்தோணியார் ஆலயம் எழும்பூர் திருஇருதய ஆலயம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றது. இது மட்டுமல்லாமல் நாகை மாவட்டத்தில் அமைந்துள்ள வேளாங்கண்ணி ஆலயத்தில் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றது.
இதேபோல் தூத்துக்குடி மதுரை தேனி திண்டுக்கல் சிவகங்கை ராமநாதபுரம் உள்ளிட்ட தமிழகத்திலுள்ள பல்வேறு பகுதிகளிலும் கிறிஸ்துமஸ் பண்டிகை வழக்கமான உற்சாகத்துடன் கொண்டாடப்பட்டு வருகிறது . வழிபாடு முடிவடைந்து கிறிஸ்துமஸ் மக்கள் ஒருவருக்கொருவர் சமாதானத்தை தெரிவிக்கும் வகையில் வாழ்த்துக்களை பரிமாறிக் கொண்டதோடு இனிப்புகளை வழங்கி கிருஸ்துமஸ் நல் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொண்டனர்.
தற்போது கொரோனா பரவி வருவதால் ஆலயங்களில் கட்டுப்பாடுகள் பின்பற்றப்பட்டன . முகக்கவசம் அணிந்து தனிமனித இடைவெளியுடன் இந்த வழிபாடுகள் நடைபெற்று வருகிறது. இதேபோல் திருவள்ளூர், காக்களூர், ஈக்காடு, மணவாளநகர், திருப்பாச்சூர், கடம்பத்தூர், பேரம்பாக்கம், மப்பேடு, கீழச்சேரி, செவ்வாப்பேட்டை, வேப்பம்பட்டு, அரண்வாயல், திருமழிசை, வெள்ளவேடு மற்றும் திருவள்ளூர் மாவட்டம் முழுவதும் உள்ள கிறிஸ்தவ தேவாலயங்களில் கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி கிறிஸ்தவர்கள் சிறப்பு வழிபாடு நடத்தினர்.கிருஸ்துவ தேவாலயங்கள் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு ஜொலித்தது.