புத்தாடைகள் இல்லாமல் கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு; பணத்தட்டுப்பாட்டல் சோகம்…

First Published Dec 21, 2016, 8:46 AM IST
Highlights


திருப்பூர்

திருப்பூர் மாநகரில் பணத்தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால் கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு பண்டிகைக்கு புதிய ஆடைகள் எடுக்க முடியாமல் பொதுமக்கள் திணறி வருகிறார்கள். இதனால் துணிக்கடைகளில் கூட்டம் மிகவும் குறைந்தே காணப்படுகிறது என்று வியாபாரியகள் சோகத்துடன் இருக்கின்றனர்.

பழைய ரூ.500, ரூ.,1000 நோட்டுகள் செல்லாது என்ற அறிவிப்பை தொடர்ந்து வங்கிகளில் பணம் எடுப்பது வரை பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. ஏ.டி.எம். எந்திரங்களில் கூட ஒருநபர் நாளொன்றுக்கு ரூ.2 ஆயிரம் மட்டுமே எடுக்க முடியும் என்பதால் திருப்பூர் மாநகரில் உள்ள மக்களிடம் பணத்தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில், கிறித்தவர்களின் முக்கிய பண்டிகையான கிறிஸ்துமஸ் பண்டிகை வருகிற 25–ஆம் தேதியும், புத்தாண்டும் வருகிறது. இந்த பண்டிகைகளையொட்டி புத்தாடை அணிந்து தேவாலயங்களுக்கு, கடற்கரை என பல்வேறு இடங்களுக்குச் சென்று பண்டிகைகளை கொண்டாடுவர்.

கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு பண்டிகையையொட்டி 10 நாள்களுக்கு முன்பாகவே திருப்பூர் மாநகரில் உள்ள துணிக்கடைகளில் ஆண்டுதோறும் கூட்டம் அலைமோதும்.

அதுபோல் கிறிஸ்துமஸ் குடில்கள், வண்ண, வண்ண நட்சத்திரங்களை வாங்கி கிறிஸ்தவர்கள் தங்கள் வீடுகளை அலங்கரிப்பார்கள்.

குறிப்பாக பனியன் தொழில் நிறுவனங்களில் பணியாற்றும் தொழிலாளர்களுக்கு கூட சம்பளத்தை பணமாக கொடுக்க முடியாமல் அவரவர் வங்கி கணக்குகளில் செலுத்தி வருகிறார்கள்.

தொழிலாளர்களும், வங்கிகள் மற்றும் ஏ.டி.எம். மையங்களுக்கு முன் கால்கடுக்க காத்திருந்து பணத்தை எடுத்து வருகிறார்கள். மாநகரில் உள்ள பெரும்பாலான ஏ.டி.எம். மையங்களில் பணம் இல்லை.

இதுபோன்ற காரணங்களால் போதிய பணம் கையில் இல்லாமல் பண்டிகைகளுக்கு துணிக்கடைகளில் புத்தாடைகள் எடுக்க முடியாமல் பொதுமக்கள் பெரும் சிரமத்தை சந்தித்துள்ளனர்.

இதன் காரணமாக மாநகரில் உள்ள துணிக்கடைகளில் மக்கள் கூட்டம் மிகவும் குறைந்தே காணப்படுகிறது. வழக்கமான பண்டிகை உற்சாக விற்பனை துணிக்கடைகளில் இல்லை என்றும், துணிக்கடைகளில் ‘ஸ்வைப் மெஷின்’ இருந்தபோதிலும் ஏழை, எளிய மக்களால் கிரெடிட் கார்டு, டெபிட் கார்டுகளை உபயோகிக்க முடியாமல் உள்ளனர் என்று கடை உரிமையாளர்கள் தெரிவித்தனர்.  

மேலும், கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு இன்னும் 4 நாட்களே இருப்பதால் அதற்குள் மக்களின் பணத்தேவையை பூர்த்தி செய்யும் நடவடிக்கையை மாவட்ட வங்கி அதிகாரிகள் மேற்கொள்ள வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

click me!