
அவினாசி
அவினாசி பகுதியில் அடிப்படை வசதிகளை நிறைவேற்ற வலியுறுத்தி ஊராட்சி மன்ற அலுவலகம் முன்பு காலி குடங்களுடன் 80 பெண்கள் உள்பட ஏராளமானோர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கருவலூர் இந்திராநகர், ஜோதிநகர், மற்றும் மூகாம்பிகை நகர் உள்ளிட்ட இடங்களில் கழிவுநீர் கால்வாய் வசதிகள் வேண்டும் என்பது உள்பட நீண்ட கால பிரச்சனைகளை தீர்க்கக்கோரி உடனே அடிப்படை வசதிகளை நிறைவேற்ற வலியுறுத்தி வந்தனர்.
அப்பகுதி முழுவதும் சாலைகள் பெயர்ந்து பொதுமக்களுக்கு பயன்பாடின்றி குண்டும் குழியுமாக இருக்கிறது.
அவினாசி ஒன்றியம் கருவலூர் ஊராட்சியில் அனைத்து பகுதிகளிலும் தண்ணீர் கிடைக்காமல் பொதுமக்கள் சிரமப்படுகின்றனர்.
கழிவுநீர் கால்வாய்களில் கழிவுநீர் தேங்கி சேறும் சகதியுமாக இருப்பதால் மக்களுக்கு தொற்றுநோய் பரவும் அபாயம் ஏற்படுகிறது.
இந்த நிலையில் நேற்று அப்பகுதியை சேர்ந்த 80 பெண்கள் உள்பட திரளான பொதுமக்கள் கருவலூர் ஊராட்சி மன்ற அலுவலகம் முன்பு காலி குடங்களுடன் வந்து அடிப்படை வசதிகளை நிறைவேற்றக்கோரி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த போராட்டத்திற்கு முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் விஜயராகவன் தலைமை தாங்கினார்.
இந்திய கம்யூனிஸ்டு கட்சி மாவட்ட குழு உறுப்பினர் அருண், ஊராட்சி மன்ற முன்னாள் தலைவர் அருணாச்சலம், சற்குணம், தங்கவேல் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.