
சென்னையில் கல்லறை திருநாள் நிகழ்ச்சியையொட்டி மறைந்த உறவினர்களுக்கு ஏராளமான கிறிஸ்தவர்கள் கல்லறைக்கு சென்று கண்ணீர் அஞ்சலி செலுத்தினார்கள்.
கிறிஸ்தவ மதத்தில், இறந்தவர்ள் கல்லறைகளில் அடக்கம் செய்யப்படுகின்றனர். அவர்களை நினைவுகூறுவதற்காக ஆண்டு தோறும் நவம்பர் 2ம் தேதி கல்லறை திருநாள் அல்லது சகல ஆத்துமாக்களின் திருநாள் என கடைபிடிக்கப்பட்டு வருகிறது.
இந்தநாளில், மறைந்த உறவினர்களின் கல்லறைகளுக்கு சென்று, கிறிஸ்தவர்கள் பிரார்த்தனை செய்வது வழக்கம். சென்னையில் இந்த நிகழ்ச்சிக்காக சென்னை கல்லறை வாரிய அறக்கட்டளைக்கு உட்பட்ட கீழ்ப்பாக்கம், காசிமேடு உள்பட அனைத்து கல்லறை தோட்டங்களிலும் சிறப்பு ஏற்பாடுகள் நேற்று செய்யப்பட்டு இருந்தன. அதேபோல் பட்டினப்பாக்கத்தில் உள்ள கியூபுள் ஐலேண்ட் கல்லறை தோட்டத்திலும் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.
இதையொட்டி கல்லறை தோட்டம் முழுவதும் கிறிஸ்தவ பாடல்கள் ஒலிபரப்பப்பட்டன. மழைக்காலம் என்பதால் ஆங்காங்கே சாமியானா பந்தல்களும் அமைக்கப்பட்டன. மறைந்த உறவினர்களை கிறிஸ்தவர்கள் நினைவு கூரும் விதமாக நடைபெறும் இந்த நிகழ்ச்சியில் நேற்று காலையிலேயே கல்லறை தோட்டத்துக்கு ஏராளமானோர் குடும்பத்துடன் சென்றனர்.
உறவினர்களின் கல்லறையை சுத்தம் செய்து, பூக்களால் அலங்கரித்து, கல்லறையின் மேல் மெழுகுவர்த்தி, பத்தி, சாம்பிராணி ஆகியவற்றை ஏற்றி, ஜெப புத்தகத்தை வைத்து பாடல் பாடி பிரார்த்தனை செய்தனர். வயதான சிலர் நடக்க முடியாமல் மற்றவர்களின் உதவியுடன் வந்து இறந்தவர்களின், கல்லறையில் கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினர்.
சென்னையில் நேற்று காலையில் மழை பெய்தாலும் கொட்டும் மழையில் மறைந்த உறவினர்களுக்கு அவர்களின் நினைவுகளை சுமந்து வந்து கல்லறையின் அருகே அமர்ந்து பலர் அஞ்சலி செலுத்தினார்கள்.
கீழ்ப்பாக்கம் கல்லறை தோட்டத்தில் கூட்டநெரிசல் ஏற்பட்டுவிடாத வண்ணம், போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளே செல்பவர்களையும், வெளியே வருபவர்களையும் கண்காணித்தனர்.