இன்று முதல் தற்காலிக ஆசிரியர்கள் தேர்வு... என்னென்ன தகுதி..? யாரை அணுக வேண்டும் தெரியுமா..?

By Thiraviaraj RMFirst Published Jan 25, 2019, 12:35 PM IST
Highlights

ஆசிரியர்கள் போராட்டம் தொடர்வதால் லட்சக்கணக்கான தற்காலிக ஆசிரியர்கள் தேர்வு இன்று முதல் தொடங்க உள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அறித்துள்ளது.
 

ஆசிரியர்கள் போராட்டம் தொடர்வதால் லட்சக்கணக்கான தற்காலிக ஆசிரியர்கள் தேர்வு இன்று முதல் தொடங்க உள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அறித்துள்ளது.

பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்பது உள்பட 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு ஊழியர்-ஆசிரியர்கள் கூட்டமைப்பான ஜாக்டோ-ஜியோ சார்பில் காலவரையற்ற வேலைநிறுத்தம் நடந்து வருகிறது. கடந்த செவ்வாய்க்கிழமை தொடங்கிய இந்த போராட்டம் இன்று 4-வது நாளாக நீடித்து வருகிறது. தமிழகத்தில் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் சுமார் 13 லட்சம் பேர் உள்ளனர். இவர்களில் 8 லட்சம் பேர் காலவரையற்ற போராட்டத்தில் குதித்துள்ளனர். இதனால் அரசு அலுவலகங்கள், பள்ளிகளில் வழக்கமான பணிகள் முடங்கியுள்ளன.

தமிழகத்தில் பெரும்பாலான ஊர்களில் தொடக்கப்பள்ளிகள் கடந்த 4 நாட்களாக மூடப்பட்டுள்ளன. நேற்றும், நேற்று முன்தினமும் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் அனைத்து மாவட்டங்களிலும் மறியலில் ஈடுபட்டனர். இதையடுத்து ஆயிரக்கணக்கானவர்கள் கைது செய்யப்பட்டு திருமண மண்டபங்களில் தங்க வைக்கப்பட்டு வருகின்றனர்.

இதற்கிடையே போராட்டத்தில் ஈடுபட்டு வரும் ஆசிரியர்களுக்கு பதிலாக தற்காலிக ஆசிரியர்களை தேர்வு செய்து நியமனம் செய்ய பள்ளிக் கல்வித்துறைச் செயலாளர் பிரதீப் யாதவ் அரசாணை வெளியிட்டுள்ளார். அதன்படி தற்காலிக ஆசிரியர்கள் தேர்வு இன்று முதல் தொடங்கி வருகிறது. பெற்றோர்-ஆசிரியர் சங்கம் மூலமாக பள்ளிகளுக்கு அருகில் உள்ள ஓய்வு பெற்ற ஆசிரியர்கள், ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களை தேர்வு செய்து பள்ளிக்கூடங்களை தங்கு தடையின்றி நடத்த ஏற்பாடு செய்ய வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. அரசு பள்ளியில் ஆசிரியர்கள் வேலைக்கு வராததால் தற்காலிக ஆசிரியை அப்படி தேர்வு செய்யப்படும் தற்காலிக ஆசிரியர்களுக்கு ரூ.7,500 சம்பளம் வழங்கலாம் என்றும் அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த அரசாணையைத் தொடர்ந்து தமிழ்நாடு முழுவதும் தற்காலிக ஆசிரியர்களை தேர்வு செய்யும் பணி இன்று தொடங்கியது. 3 நாட்களுக்குள் தற்காலிக ஆசிரியர்கள் தேர்வு பணியை முடிக்கும்படி பெற்றோர்-ஆசிரியர் சங்கங்களிடம் கூறப்பட்டுள்ளது. பெற்றோர், ஆசிரியர் சங்கம் இல்லாத பள்ளிகளில் அருகில் உள்ள பள்ளிகளில் இயங்கும் சங்கங்கள் மூலம் தற்காலிக ஆசிரியர்களை தேர்வு செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இப்படி தேர்வு செய்யப்படும் தற்காலிக ஆசிரியர்கள் 28-ந்தேதி முதல் பள்ளிகளில் பணி அமர்த்தப்படுவார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே 28-ந்தேதி முதல் தற்காலிக ஆசிரியர்கள் உதவியுடன் தொடக்கப் பள்ளிகளைத் திறந்து பாடம் நடத்த ஏற்பாடுகள் நடந்து வருகிறது.
 

click me!