12-ஆம் நூற்றாண்டை சேர்ந்த சோழர் கால கல்வெட்டு கண்டுபிடிப்பு. எங்கே தெரியுமா?

First Published Feb 26, 2018, 10:21 AM IST
Highlights
Chola period inscription of the 12th century found Where


சிவகங்கை

சிவகங்கையில் 12-ஆம் நூற்றாண்டை சேர்ந்த வட்டெழுத்துகள் பொறிக்கப்பட்ட சோழர் கால கல்வெட்டு கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது.

சிவகங்கை மாவட்டம், திருமலை, கள்ளராதினிப்பட்டி கிராமத்தில் ஆதினிகண்மாயின் வடக்கு பகுதியில் பழமையான மடை உள்ளது. இந்த மடையின் இருபுறமும் 15 அடி உயரமுடைய 2 கற்கள் உள்ளன. அவற்றின் தெற்குபுறம் உள்ள கல்லின் கீழ்ப்பகுதியில் வட்டெழுத்துகள் காணப்படுகின்றன.

அவற்றை திருமலையைச் சேர்ந்த மருத்துவர் அப்துல்கலாம் நற்பணி மன்றம் இளைஞர்களின் மூலம் படி எடுக்கப்பட்டு, அவை மதுரையில் உள்ள தொல்லியல் ஆய்வாளர் வேதாசலத்திடம் கொடுக்கப்பட்டது.

அவர் அதை படித்து பார்த்ததில், அதில் “12-ஆம் நூற்றாண்டு செயங்கொண்ட சோழனா கள வழி நாடாள்வன்” என்று எழுதப்பட்டிருந்தது. அதாவது 12-ஆம் நூற்றாண்டில் செயங்கொண்டான் என்ற சோழ மன்னர் இந்த மடையையும், கண்மாயையும் அமைத்துக் கொடுத்துள்ளார் என்பதாகும்.

இதுகுறித்து திருமலை மருத்துவர் அப்துல்கலாம் நற்பணி மன்ற நிர்வாகி ஐயனார், "12-ஆம் நூற்றாண்டில் செயங்கொண்டான் என்ற சோழ மன்னன் விவசாயத்திற்காக ஏற்படுத்தியதே இந்த கண்மாய் மற்றும் மடையாகும்.

விவசாயம் இந்தப் பகுதியில் செழித்தோங்கி இருந்துள்ளது. இந்த கண்மாய் மூலம் 200 ஏக்கர் பாசன வசதி பெற்று வந்துள்ளது. இன்றைய வருவாய் துறை கணக்கின்படி கண்மாயின் நீர்பிடி பகுதி மதுரை மாவட்டத்தில் இருந்து வருகிறது.

கண்மாயில் மூன்று மடைகள், இரண்டு மறுகால் உள்ளன. வடக்கு புறம் கழுங்கு ஒன்றும், தெற்கு புறம் எட்டுக்கண் பாலம் உள்ளது. ஆதினிக்கண்மாய் தற்போது பொதுப்பணித்துறை வசம் உள்ளது.

தற்போது இந்த கண்மாயில் அதிகமாக சீமை கருவேல மரங்கள் ஆக்கிரமித்துள்ளன. இதை அகற்ற சிவகங்கை மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று அவர் தெரிவித்தார்.

 

click me!