"ரூபாய் நோட்டு சிக்கலால் பல கோடி நஷ்டம்" - கறிக்கோழி பண்ணை உரிமையாளர்கள் புலம்பல்

 
Published : Nov 17, 2016, 06:02 PM ISTUpdated : Sep 19, 2018, 01:46 AM IST
"ரூபாய் நோட்டு சிக்கலால் பல கோடி நஷ்டம்" - கறிக்கோழி பண்ணை உரிமையாளர்கள் புலம்பல்

சுருக்கம்

ரூபாய் நோட்டு பிரச்னையால் 2 கோடி கிலோவுக்கு கறிக்கோழி தேக்கம் அடைந்துள்ளது. மேலும், மைனஸ் விலை அதிகரித்துள்ளதால், ரூ.200 கோடி அளவுக்கு நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக கறிக்கோழி பண்ணை உரிமையாளர்கள் புலம்பி தவிக்கின்றனர்.

தமிழகத்தில் திருப்பூர், கோவை, நாமக்கல், ஈரோடு, சேலம், தருமபுரி ஆகிய மாவட்டங்களில் 30 ஆயிரத்துக்கு மேற்பட்ட கறிக்கோழி பண்ணைகள் உள்ளன. இங்கு தினமும் 30 லட்சம் கிலோவுக்கு கறிக்கோழிகள் உற்பத்தி செய்யப்பட்டு, தமிழகம் மட்டுமன்றி ஆந்திரம், கர்நாடகம், கேரளம் உள்பட பல மாவட்டங்களுக்கு விற்பனைக்காக அனுப்பப்படுகின்றன.

சந்தை நிலையை சமாளித்து, பண்ணையின் கொள்முதல் விலையை, பல்லடத்தில் உள்ள கறிக்கோழி ஒருங்கிணைப்பு குழு (பிசிசி) நிர்ணயம் செய்கிறது. நவம்பர் மாதம் 10ம் தேதி வரை கறிக்கோழி விலை கிலோ ரூ.78 வரை இருந்தது. கடந்த 8ம் தேதி இரவு முதல், 500, 1,000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என மத்திய அரசு அறிவித்ததை தொடர்ந்து, சில்லறை தட்டுப்பாடு அதிகரித்தது. இதனால், வியாபாரிகள், பொதுமக்கள் கடும் அவதியடைந்தனர்.

இதையொட்டி கறிக்கோழி உற்பத்தி தேக்கமடைந்து, பண்ணை உரிமையாளர்களுக்கு, 8 நாட்களில் பல கோடி ரூபாய் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. மேலும், சில்லறைத் தட்டுப்பாடு காரணமாக கறிக்கோழி விற்பனையும் 30 சதவீதம் வரை குறைந்துள்ளது.

கடந்த 5 நாட்களில் கறிக்கோழி விலை நிர்ணயத்தைக் காட்டிலும், கிலோவுக்கு ரூ.20 வரை கொள்முதல் விலையைக் குறைத்து வழங்க வேண்டிய நிலைக்கு பண்ணை உரிமையாளர்கள் தள்ளப்பட்டுள்ளனர்.
 இதுகுறித்து தமிழ்நாடு முட்டைக்கோழி பண்ணையாளர்கள் சம்மேளனத் துணைத் தலைவர் வாங்கிலி சுப்பிரமணியனிடம் கேட்டபோது, மத்திய அரசு, 500, 1,000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என அறிவித்த பிறகு,, சில்லறை தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனால் விற்பனை பல மடங்கு சரிந்துள்ளது. வாரத்தில் ஒரு கோடி கிலோ கறிக்கோழி தேக்கம் அடைந்துள்ளது.

இதனால், கடந்த 8 நாட்களில் ரூ.150 கோடி அளவுக்கு பண்ணையாளர்களுக்கு நஷ்டம் ஏற்பட்டுள்ளது. மேலும், பல்லடம் பிராய்லர் ஒருங்கிணைப்பு குழு நிர்ணயம் செய்யும் விலையில் இருந்து ஒரு கிலோ கறிக்கோழியை மைனஸ் ரூ.20 பண்ணையாளர்கள் விற்பனை செய்வதால், அதன் மூலம் ரூ.50 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது.

 தற்போது வறட்சி காரணமாக தீவன மூலப்பொருட்கள் விலை உயர்ந்துவரும் நிலையில், அவற்றை ஈடு செய்ய முடியாமல் பண்ணை உரிமையாளர்கள் பரிதவித்து வருகின்றனர்.

மத்திய அரசின் ரூபாய் நோட்டுகள் கட்டுப்பாடு காரணமாக கறிக்கோழி பண்ணை தொழில் கடும் நெருக்கடி மட்டுமின்றி சரிவுக்கு சென்றுள்ளது என்றார்.

PREV
click me!

Recommended Stories

புத்தாண்டில் மழை அடிச்சு தும்சம் செய்யப்போகுதாம்.. குளிரும் நடுநடுங்க வைக்குப்போகுதாம்.. பொதுமக்களே உஷார்!
திமுகவுக்கு பேரிடி... அதிமுகவுக்கு சவுக்கடி..! கூட்டணி பலமானால் விஜயே முதல்வர்..! அதிரடி சர்வே..!