மோடியின் ரூபாய் நோட்டு செல்லாத அறிவிப்பு : 5 நாளில் ரூ.100 கோடி வருவாயை இழந்தது டாஸ்மாக்

Asianet News Tamil  
Published : Nov 17, 2016, 05:54 PM ISTUpdated : Sep 19, 2018, 01:46 AM IST
மோடியின் ரூபாய் நோட்டு செல்லாத அறிவிப்பு : 5 நாளில் ரூ.100 கோடி வருவாயை இழந்தது டாஸ்மாக்

சுருக்கம்

பிரதமர் மோடியின் ரூபாய் நோட்டு செல்லாத அறிவிப்பு வெளியாகி, 5 நாட்களில் டாஸ்மாக் நிறுவனத்துக்கு ரூ. 100 கோடி வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன. 

கடந்த 9ந்தேதி முதல் 13 வரை டாஸ்மாக் நிறுவனத்துக்கு சராசரியாக நாள்ஒன்றுக்கு ரூ. 15 கோடி வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. இதில் 14ந்தேதி மற்றும் 15-ந்தேதிகளில் மட்டும் நாள் ஒன்றுக்கு ரூ.11 கோடி வருவாய் இழப்பை டாஸ்மாக் சந்தித்துள்ளது.

தமிழகம் முழுவதும் 6 ஆயிரத்து 195 டாஸ்மாக் கடைகள் மாநில அரசால் நிர்வகிக்கப்பட்டு வருகின்றன. இந்த கடைகள் மூலம் நாள்ஒன்றுக்கு அரசுக்கு, ரூ. 67 கோடி முதல் 70 கோடி வரை வருவாய் கிடைத்து வருகிறது. வார இறுதிநாட்களில் இந்தவருவாய் ரூ.90 கோடிவரை எட்டும். 

குறிப்பாக தீபாவளி, கிறிஸ்துமஸ், புத்தாண்டு போன்ற பண்டிகை காலங்களில், விற்பனை படுஜோராக நடக்கும், கல்லா கட்டுக்கடங்காமல் கட்டும். பண்டிகை நாட்களில் ஒரே நாளில் ரூ.100 கோடி வரை வருவாய் கிடைக்கும். இப்படி செல்வச்செழிப்போடு இருந்த டாஸ்மாக் கடையில், கடந்த 9 ந்தேதி முதல் குடிமகன்கள் கூட்டம் குறைந்து களையிழந்து காணப்படுகிறது. வருவாயும் நாளுக்கு நாள் குறைந்து வருகிறது அதிகாரிகள் வருத்தம் தெரிவிக்கின்றனர்.

இது குறித்து டாஸ்மாக் நிறுவனத்தின் மூத்த அதிகாரி ஒருவர் நம்மிடம் கூறுகையில், “ பிரதமர் மோடி ரூ.1000, ரூ.500 நோட்டுக்களை செல்லாது என அறிவித்த நாளில் இருந்து டாஸ்மாக் கடை பக்கம் குடிமகன்கள் வருகை குறைந்துவிட்டது. நாங்களும் அதற்கு ஏற்றார்போல், ரூ.1000, ரூ.500 நோட்டுக்களை வாங்கக்கூடாது என்று கூறியதால், கூட்டம் நாளுக்குநாள் குறைந்து வருகிறது” எனத் தெரிவித்தார். 

டாஸ்மாக் ஊழியர்கள் சங்கத்தின் மூத்த உறுப்பினர் ஒருவர் கூறுகையில், “ பிரதமர்மோடியின் அறிவிப்புக்கு பின், அடுத்த 3 நாட்கள் டாஸ்மாக்கில் வியாபாரம் படு மந்தமாக இருந்தது. குடிமகன்கள் தங்கள் கையில் உள்ள ஆயிரம், 500 ரூபாய் நோட்டுக்களை மாற்றமுடியாமல் திண்டாடினார்கள். ஆனால், அதன்பின் ரூ.2000 நோட்டு வந்தபின் அதைக்கொண்டுவந்து கொடுத்து குடிக்கத் தொடங்கினர். அதிலும் சில்லறை தட்டுப்பாட்டால் நாங்கள் பலரை திருப்பி அனுப்பிவிட்டோம்” எனத் தெரிவித்தார்.

டாஸ்மாக் வியாபாரம் கடுமையாக பாதிக்கப்பட்டதற்கு முக்கியக் காரணம் மோடியின் ரூபாய் நோட்டு செல்லாத அறிவிப்பே என்று பெரும்பாலான ஊழியர்களின் கருத்தாக இருக்கிறது. 

திருச்சி மண்டலத்தில் மட்டும் டாஸ்மாக் கடைகளில் மதுவிற்பனை 30 சதவீதம்முதல் 40 சதவீதம் வரை குறைந்துவிட்டது. திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே இருக்கும் ஒரு டாஸ்மாக் கடையில் நாள்ஒன்றுக்கு  ரூ.2.7 லட்சம் வரை மது விற்பனை இருக்கும். ஆனால், மோடியின் அறிவிப்புக்கு பின் இது ரூ. ஒரு லட்சமாகக் குறைந்துவிட்டது. 

கோவை மண்டலத்தில் நாள் ஒன்றுக்கு ரூ.3.5 கோடிக்கு டாஸ்மாக்கில் மது விற்பனையாகிக் கொண்டு இருந்தது. ஆனால், கடந்த 8 நாட்களாக இங்கும் விற்பனை சரிந்தது. மேலும் சேலம் மண்டலத்திலும் இதே போல் டாஸ்மாக் கடைகளில் மதுவிற்பனை படுத்துவிட்டது. 

சேலம் மண்டலத்தில் நாள் ஒன்றுக்கு டாஸ்மாக் கடைகளில் ரூ.3.75 கோடி மது விற்பனையான நிலையில், கடந்த சில நாட்களாக, ரூ.3.06 கோடிக்கு மட்டுமே மது விற்பனை நடக்கிறதாம்.

பிரதமர் மோடியின் அறிவிப்பு கள்ள நோட்டு, கருப்பு பணத்தையும் மட்டும் ஒழிக்கவில்லை…. மது ஒழிப்புக்கும் பயன்படுகிறதோ….

PREV
click me!

Recommended Stories

கோவையில் 3.5 கோடி மதிப்புள்ள பூங்கா நிலம் ஆக்கிரமிப்பு.. மதில் சுவரை இடித்து கையகப்படுத்துங்க.. பொதுமக்கள் கோரிக்கை!
பிளம் கேக் யார் சாப்பிடுவது என தி.மு.க - த.வெ.க - வுக்கு போட்டி ! அண்ணாமலை அதிரடி பேட்டி