12ம் வகுப்பு பொதுத்தேர்வு மதிப்பெண் நேற்று வெளியான நிலையில் 600க்கு 600 மதிப்பெண்கள் பெற்ற திண்டுக்கல் மாணவி நந்தினியை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரில் அழைத்து பாராட்டினார்.
தமிழகம் முழுவதும் கடந்த மார்ச் மாதம் 13ம் தேதி 12ஆம் வகுப்புக்கான பொது தேர்வு தொடங்கியது. இத்தேர்வில் தமிழகம் முழுவதும் உள்ள மாணவ, மாணவிகள் தேர்வு எழுதினர். இந்நிலையில் தேர்வு முடிவுகளை நேற்று தமிழக பள்ளி கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி வெளியிட்டார்.
இந்நிலையில் திண்டுக்கல் கல்வி மாவட்டத்தில் திண்டுக்கல் அண்ணாமலையார் பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவி நந்தினி தமிழ், ஆங்கிலம், கணினி பயன்பாடு, பொருளியல், கணக்குப்பதிவியல், வணிகவியல் உள்ளிட்ட பாடங்களில் நூற்றுக்கு நூறு மதிப்பெண்கள் பெற்று மொத்தமாக 600க்கு 600 மதிப்பெண்கள் சேர்த்துள்ளார்.
பள்ளியின் ஆசிரியர்கள், தாளாளர், தலைமை ஆசிரியர், பெற்றோர் அளித்த ஊக்கமே வெற்றிக்கு காரணம் என மாணவி நந்தினி தெரிவித்திருந்த நிலையில், அவரை தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தொலைபேசி வாயிலாக தொடர்புகொண்டு வாழ்த்து தெரிவித்தார். மேலும் தொடர்ந்து இதுபோன்று சிறந்து விளங்கி சக மாணவர்களுக்கு ஊக்கமாக இருக்க வேண்டும் என்று தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று மாணவி நந்தினியை நேரில் அழைத்து பாராட்டு தெரிவித்தார். மேலும் அவர் மாணவியிடம் பேசுகையில், உங்களுக்கு எந்த உதவி வேண்டுமானாலும் கேளுங்கள் நாங்கள் செய்து கொடுக்கிறோம் என்று உறுதி அளித்துள்ளார்.