
அதிமுக உட்கட்சி மோதல்
ஜெயலலிதா மறைவிற்கு பிறகு அதிமுகவில் ஏற்பட்ட அதிகார மோதல் காரணமாக பல பிரிவாக பிளவுபட்டுள்ளது. டிடிவி தினகரன், சசிகலா என ஏற்பட்ட பிளவின் அடுத்த கட்டமாக தற்போது ஓ.பன்னீர் செல்வமும் தனியாக பிரிந்து சென்றுள்ளார். இந்தநிலையில் அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி இடைக்கால பொதுச்செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்த ஓபிஎஸ் சட்ட போராட்டங்களை உயர்நீதிமன்றம் மற்றும் உச்சநீதிமன்றத்தில் நடத்தினார். ஆனால் அனைத்திலும் ஓபிஎஸ்க்கு பின்னடைவாக அமைந்தது. இதனையடுத்து நடைபெற்ற பொதுச்செயலாளர் தேர்தலிலும் போட்டியின்றி எடப்பாடி பழனிசாமி தேர்ந்தெடுக்கப்பட்டார்.
தேர்தல் ஆணையம் அங்கீகரிப்பு
ஆனால் தேர்தல் ஆணையத்தில் அதிமுகவில் ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் என்ற பதவியை தொடர்ந்து நீடித்து வந்தது. இதன் காரணமாக மீண்டும் டெல்லி நீதிமன்றத்தில் எடப்பாடி பழனிசாமி முறையிட்ட நிலையில், தேர்தல் ஆணையம் அதிமுக பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமியை அங்கீகரித்து கடிதம் அனுப்பியது. இதனையடுத்து அதிமுகவை பலப்படுத்தும் வகையில் பல்வேறு நடவடிக்கைகளை எடப்பாடி பழனிசாமி மேற்கொண்டு வருகிறார். மேலும் ஆகஸ்ட் மாதம் மாநில மாநாடு நடத்தவும் ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது. இந்தநிலையில் அதிமுகவில் ஒற்றை தலைமை மோதல் ஏற்பட்ட நிலையில் திருப்பதி கோயிலுக்கு எடப்பாடி பழனிசாமி சென்று வழிபட்டார். தற்போது அதிமுகவில் தலைமை பொறுப்பிற்கு ஏற்பட்ட சட்ட போராட்டங்கள் முடிவடைந்த நிலையில் எடப்பாடி பழனிசாமி திருப்பதி கோயிலுக்கு சென்று தரிசனம் செய்ய திட்டமிட்டார்.
திருப்பதியில் எடப்பாடி பழனிசாமி
இதனையடுத்து நேற்று மாலை சென்னையில் இருந்து திருப்பதி செல்லும் வழியில் வானகரத்தில் முன்னாள் அமைச்சர் பென்ஜமின், திருவள்ளூரில் முன்னாள் அமைச்சர் பிவி.ரமணா, திருத்தணியில் முன்னாள் எம்பி கோ. அரி ஆகியோர் எடப்பாடி பழனிசாமிக்கு வழி நெடுக வரவேற்பு அளித்தனர். இதனையடுத்து நேற்று இரவு திருப்பதியில் தங்கிய அவர், இன்று காலை திருப்பதி வெங்கடாசலபதி பெருமாளை எடப்பாடி பழனிசாமி குடும்பத்தோடு சென்று வழிபட்டார்.
இதையும் படியுங்கள்
திமுகவின் புதிய உருட்டு; சர்ச்சையில் இருந்து தப்பிக்க பெண் அமைச்சருக்கு தயாரான டம்மி பொறுப்பு!!