
கோயம்புத்தூர்
"எரிவாயு டேங்கர் லாரி உரிமையாளர்களின் கோரிக்கையை ஏற்று புதிய டெண்டர் முறையை திரும்ப பெற தமிழக முதலமைச்சர், மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும்" என்று கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி பொதுச்செயலாளர் ஈ.ஆர். ஈஸ்வரன் தெரிவித்துள்ளார்.
கோயம்புத்தூர் மாவட்டத்தின் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி பொதுச்செயலாளர் ஈ.ஆர். ஈஸ்வரன் நேற்று அறிக்கை ஒன்றை வெளியிட்டார்.
அந்த அறிக்கையில் ,"மத்திய பெட்ரோலிய எரிவாயு அமைச்சகம் அறிவித்துள்ள கியாஸ் டேங்கர் லாரிகளுக்கான புதிய டெண்டர் முறையை திரும்ப பெற வலியுறுத்தி தென் மண்டல டேங்கர் லாரி உரிமையாளர்கள் நேற்று முதல் காலவரையற்ற வேலைநிறுத்தத்தை தொடங்கியுள்ளனர். இதற்கு எங்கள் கட்சியின் முழு ஆதரவை தெரிவித்து கொள்கிறோம்.
மத்திய அரசின் இந்த அறிவிப்பால் டேங்கர் லாரி உரிமையாளர்கள் பாதிக்கப்படுவதோடு மட்டுமல்லாமல், அந்த தொழிலை நம்பியிருக்கின்ற இலட்சக்கணக்கான தொழிலாளர்களும் பாதிக்கப்படுவார்கள்.
இதனை மத்திய, மாநில அரசுகளிடம் கடந்த இரண்டு மாதங்களாக டேங்கர் லாரி உரிமையாளர்கள் சங்க பிரதிநிதிகள் வலியுறுத்தி வந்தனர். ஆனாலும், அதற்கு செவிசாய்க்காமல் புதிய டெண்டர் முறை அறிவிக்கப்பட்டதால், அவர்கள் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபடும் சூழல் உருவாகியுள்ளது.
மத்திய அரசு ஒரு கொள்கை முடிவை புதிதாக கொண்டு வரும்போது அந்த தொழிலில் உள்ளவர்களிடம் கலந்தாலோசித்து நடைமுறைப்படுத்த வேண்டும். ஆனால், அப்படி செய்வது கிடையாது. இதனால் பாதிக்கப்படுவது அந்த தொழிலில் ஈடுபட்டிருப்பவர்களும், மக்களும்தான்.
நாட்டின் ஒற்றுமையை பற்றி பேசுகின்ற மத்திய அரசு டேங்கர் லாரி டெண்டர் முறையில் அந்தந்த மாநிலத்தில் அந்தந்த மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் மட்டுமே பங்கேற்க முடியும் என்று சொல்வது நியாயமா? இப்படியே போனால் தேசிய நெடுஞ்சாலை அமைப்பதில் கூட அந்தந்த மாநிலத்தில், அந்தந்த மாநிலத்தை சார்ந்தவர்கள்தான் வேலை செய்ய வேண்டும் என்றும் சொல்வார்கள்.
மக்களின் அன்றாட வாழ்வில் அத்தியாவசிய தேவையான எரிவாயு சிலிண்டருக்கு தமிழகம், கேரளா, கர்நாடகா உள்ளிட்ட தென்மாநிலங்களில் தட்டுப்பாடு ஏற்படுவதற்குள் வேலை நிறுத்தத்தை முடிவுக்கு கொண்டுவர மத்திய, மாநில அரசுகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.
எரிவாயு டேங்கர் லாரி உரிமையாளர்களின் கோரிக்கையை ஏற்று புதிய டெண்டர் முறையை திரும்ப பெற வேண்டும். இதற்கு தமிழக முதலமைச்சர், மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும்" என்று அவர் அதில் தெரிவித்துள்ளார்.