தமிழகத்தில் ஊரடங்கா ? முதல்வர் தீவிர ஆலோசனை.. விரைவில் வெளியாகும் அறிவிப்பு !

By Raghupati R  |  First Published Jan 4, 2022, 7:42 AM IST

தமிழகத்தில் அதிகரித்து வரும் ஒமிக்ரான் பரவலைக் கட்டுப்படுத்த மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பாக மருத்துவத்துறை உயர் அதிகாரிகளுடன், முதலமைச்சர் மு.க ஸ்டாலின் இன்று ஆலோசனை மேற்கொள்கிறார்.


ஒமிக்ரான் அச்சம் உலகெங்கும் ஆட்டிப்படைத்து வருகிறது. இந்தியாவிலும் ஒமிக்ரான் பரவலுக்குப் பின்னர் தினசரி வைரஸ் பாதிப்பு மீண்டும் 10 ஆயிரத்தைத் தாண்டியுள்ளது. அதேபோல தமிழ்நாட்டிலும் கொரோனா பாதிப்பு மீண்டும் மெல்ல அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. குறிப்பாக, தலைநகர் சென்னையில் வைரஸ் பாதிப்பு மளமளவென உயரத் தொடங்கியுள்ளது. ஒமிக்ரான் பரவல் காரணமாக கொரோனா உயரத் தொடங்கியிருக்கும் என அஞ்சப்படுகிறது. 

Latest Videos

undefined

டெல்டா கொரோனாவை காட்டிலும் இந்த ஒமிக்ரான் கொரோனா குறைந்தபட்சம் 3 மடங்கு வேகமாகப் பரவலாம் என ஆய்வாளர்கள் எச்சரித்துள்ளனர். அதேநேரம் ஒமிக்ரான் லேசான பாதிப்பை மட்டுமே ஏற்படுத்துவதாகவும் 3ஆம் அலை ஏற்கனவே முடிந்துவிட்டதாகவும் தென் ஆப்பிரிக்க மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

தமிழ்நாட்டில் கொரோனா தொற்றின் இரண்டவது அலை அதிவேகமாக குறைந்து வந்தது. இதனால் அரசும், மக்களும் நிம்மதியாக இருந்த நிலையில் ஒமிக்ரான் வைரஸ் புகுந்த நேரத்தில் இருந்து தமிழ்நாட்டில் மீண்டும் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 1,728 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

சென்னை தலைமை செயலகத்தில் இன்று நடைபெறும் இந்த ஆலோசனை கூட்டத்தில், தலைமை செயலாளர் இறையன்பு, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், சுகாதாரத்துறை அதிகாரிகள் மற்றும் தமிழ்நாடு அரசின் முக்கிய அதிகாரிகள் பங்கேற்க உள்ளனர்.

இந்த கூட்டத்தில், மாவட்டங்களில் கட்டுப்பாடுகளை தீவிரப்படுத்துவதோடு, மாவட்ட எல்லைகளில் கண்காணிப்புகளை கடுமையாக்குவது, பரிசோதனைகளை அதிகரிப்பது, கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகளை தீவிரப்படுத்துவது மற்றும் ஊரடங்கு தொடர்பாக ஆலோசிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

click me!