சிறார்களுக்கு தடுப்பூசி.. ஒரே நாளில் 2.34 லட்சம் பேருக்கு தடுப்பூசி.. சுகாதாரத்துறை தகவல்..

By Thanalakshmi VFirst Published Jan 3, 2022, 9:39 PM IST
Highlights

தமிழ்நாட்டில் இன்று ஒரே நாளில் 2 லட்சத்து 34 ஆயிரம் சிறார்களுக்கு கொரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளதாக  சுகாதாரத்துறையினர் தெரிவித்துள்ளனர்.

நாட்டில் ஒமைக்ரான் பரவி வருவதை கருத்தில் கொண்டு, 15 முதல் 18 வயதுக்கு உட்பட்போருக்கு கோவேக்சின் தடுப்பூசி போட மத்திய அரசு அண்மையில் அனுமதி அளித்தது. அதன்படி இன்று முதல் பள்ளிகள் உள்ளிட்ட இடங்களில் தடுப்பூசிகள் செலுத்தப்படுகின்றன. மொத்தம் 33 லட்சம் பேருக்கு தடுப்பூசி போட அரசு நடவடிக்கை எடுத்து வரும் நிலையில், இன்று ஒரே நாளில் 2 லட்சத்து 34 ஆயிரம் சிறார்களுக்கு கொரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளது. அதிகபட்சமாக திருவண்ணாமலை மாவட்டத்தில் 22 ஆயிரத்து மேற்பட்டோருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. மேலும் நாடுமுழுவதும்  37,84,212 சிறார்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

முன்னதாக மத்திய சுகாதாரத்துறை வெளியிட்ட தகவலின்படி மாநில மற்றும் யூனியன் அரசுகளிடம் 19,81,97,286 டோஸ் தடுப்பூசி கையிருப்பு உள்ளது. இதனால் தடுப்பூசி பற்றாக்குறை ஏற்படாத வண்ணம் ஏற்பாடுகள் தயார் செய்யப்பட்டுள்ளது. நாட்டில் உள்ள 32,029 தடுப்பூசி மையங்களில் குறிப்பிட்ட தடுப்பூசி மையங்களில் 15 முதல் 18 வயதுடையோருக்கான தடுப்பூசி செலுத்தப்படுகிறது என்று கூறப்பட்டுள்ளது. தடுப்பூசி செலுத்திக் கொள்ளும் மாணவர்கள் ஓய்வெடுக்க விடுப்பு எடுத்து கொள்ளலாம் எனவும், பள்ளிக்கு வரும்போது தடுப்பூசி சான்றிதழ் நகல் சமர்ப்பிக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதனிடையே கடந்த 1ம் தேதி முதல் கோவின் இணையத்தில் 15 முதல் 18 வயதுடையோர் தடுப்பூசி செலுத்திக் கொள்ள பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், ஏற்கெனவே மாணவர்களின் பெற்றோர் எண்ணுக்கு தடுப்பூசி செலுத்தும் மையங்களின் விவரங்கள் அனுப்பட்டதாகவும் தடுப்பூசி செலுத்தி கொள்ள மையங்களுக்கு செல்லும்போது 10ம் வகுப்பு அடையாள அட்டை அல்லது ஆதார் அட்டை கொண்டு செல்லவும் அறிவுறுத்தப்பட்டது.

கடந்த டிசம்பர் 25 ஆம் தேதி நாட்டு மக்களிடையே பேசிய பிரதமர் மோடி இந்தியாவில் 15-18 வயதுள்ளவர்களுக்கு ஜனவரி 3ஆம் தேதிமுதல் கொரோனா தடுப்பூசி செலுத்தப்படும். இந்தியாவில் முன்களப் பணியாளர்களுக்கு ஜனவரி 10 முதல் கூடுதல்(பூஸ்டர்) தடுப்பூசி செலுத்தப்படும். அதேபோல் 60 வயதைக் கடந்தவர்கள், இணை நோய்கள் உள்ள நபர்களும் ஜனவரி 10 முதல் பூஸ்டர் தடுப்பூசி செலுத்தலாம் என்று அறிவித்தார்.  உலகின் முதல் டி.என்.ஏ தடுப்பூசி இந்தியாவில் பயன்பாட்டிற்கு வரவுள்ளது. மூக்கு வழியாக செலுத்தும் கொரோனா தடுப்பு மருந்துகளும் விரைவில் அறிமுகம் செய்யப்படவுள்ளன எனவும் கூறினார்.

இதனையடுத்து அண்மையில் கொரோனா தொற்றிற்கு எதிரான போராட்டத்தை மேலும் வலுபடுத்தும் வகையில் கோர்பிவேக்ஸ், கோவாவேக்ஸ் ஆகிய தடுப்பூசிகளின் அவசர கால பயன்பாட்டிற்கு இந்திய மருந்து தர கட்டுபாட்டு  ஆணையம் அனுமதி அளித்தது. மேலும் கொரோனா தொற்று சிகிச்சைக்கான மால்னுபிராவிர் மாத்திரையின் அவசர கால பயன்பாட்டுக்கும் அனுமதி வழங்கப்பட்டது. முன்னதாக கோர்பிவேக்ஸ், கோவாவேக்ஸ் ஆகிய தடுப்பூசியையும் மால்னுபிராவிர் மாத்திரையும் இந்தியாவில் பயன்படுத்த அனுமதி அளிக்கலாம் என்று மத்திய மருந்துகள் தர கட்டுபாட்டு அமைப்பின் தடுப்பூசி நிபுணர் குழு மத்திய அரசுக்கு பரிந்துரை வழங்கியிருந்தது. அதன்படி, ஒரே நாளில் மூன்று மருந்துகளின் அவசர கால பயன்பாட்டிற்கும் அனுமதி வழங்கப்பட்டது. கோர்பிவேக்ஸ், கோவாவேக்ஸ் ஆகிய தடுப்பூசியையும் மால்னுபிராவிர் மாத்திரையும் கட்டுபாடுகளுடன் பயன்படுத்த அனுமதி அளிக்கப்பட்டது. ஆனால் 15 - 18 வயது உடையவர்களுக்கு கோவேக்சின் தடுப்பூசி மட்டும் செலுத்தவே மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

click me!