சென்னையில் நேற்று வெளுத்து வாங்கிய கன மழையை, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நள்ளிரவு நேரத்தில் திடீரென சென்னை ரிப்பன் மாளிகை வந்து, மாநகராட்சி பேரிடர் கட்டுப்பாட்டு மையத்தில் ஆய்வு செய்தார். இது அதிகாரிகளிடத்தில் மட்டுமல்லாமல், பொதுமக்களிடையேயும் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
சென்னையில் நேற்று காலை முதலே வாகனம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. நண்பகலில் நகரின் பல்வேறு பகுதிகளில் லேசான மழை பெய்தது. மாலையில் 3 மணி நேரத்திற்கும் மேலாக சென்னையின் பல்வேறு பகுதிகளில் இடியுடன் கூடிய கனமழை பெய்தது. இதனால் சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது.கனமழையால் தாழ்வான பகுதிகளில் உள்ள பல்வேறு கடைகளுக்குள் தண்ணீர் புகுந்தது.
கடந்த மழையின்போது சேதமடைந்த சாலைகளில் தற்காலிகமாக சீரமைக்கப்பட்ட நிலையில், இன்று பெய்த மழையால், அந்த பகுதிகள் சேறும் சகதியுமாக மாறியது. தொடர்ந்து மழை பெய்ததால், சென்னையில் பல்வேறு இடங்களில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதனால் மெட்ரோ ரெயில்களில் பயணிகள் கூட்டம் அதிகரித்தது. இதேபோல் சென்னை புறநகர்ப் பகுதிகளிலும் மழை பெய்தது.
சென்னையில் திருவல்லிக்கேணி, அண்ணா சாலை, தி.நகர், தேனாம்பேட்டை, மெரினா கடற்கரை, பட்டினப்பாக்கம், மயிலாப்பூர், மந்தைவெளி, எம்.ஆர்.சி நகர், ஆதம்பாக்கம், கேளம்பாக்கம் உள்பட பல்வேறு பகுதிகளில் தொடர் கன மழை பெய்து வெளுத்து வாங்கியது.இந்நிலையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நள்ளிரவு நேரத்தில் திடீரென சென்னை ரிப்பன் மாளிகையில் உள்ள மாநகராட்சி பேரிடர் கட்டுப்பாட்டு மையத்தில் ஆய்வு செய்தார்.
மழை பாதிப்பு மற்றும் மாநகராட்சி மேற்கொண்டுள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அதிகாரிகளிடம் முதலமைச்சர் கேட்டறிந்தார். அப்போது மாநகராட்சி சார்பில் எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்து முதலமைச்சரிடம் மாநகராட்சி ஆணையர் ககன்தீப்சிங் பேடி விளக்கம் அளித்தார்.
அமைச்சர் சேகர்பாபு உடன் இருந்தார். மேலும் மக்கள் அளித்துள்ள புகார்கள், அதற்கு எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து சென்னை மாநகராட்சி ஆணையர், முதலமைச்சரிடம் தெரிவித்தார். பின்னர் தாழ்வான பகுதிகளில் மழை நீரை வெறியேற்றும் பணி குறித்தும் முதலமைச்சர் நேரில் சென்று ஆய்வு செய்தார்.