
வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தின் கடலோர மாவட்டங்களில் கனமழை பெய்து வரும் நிலையில் அடுத்த 3 மணி நேரத்திற்கு சென்னை உட்பட 4 மாவட்டங்களுக்கு ரெட் அலெர்ட் விடுக்கப்பட்டுள்ளது. வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக அடுத்த 5 நாட்களுக்கு தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் குறிப்பாக அடுத்த மூன்று நாட்களில் தமிழகத்தில் மழையின் அளவு அதிகரிக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதையடுத்து தமிழகத்தின் பல மாவட்டங்களில் காலை முதலே மழை பெய்து வருகிறது.
வளிமண்டல் மேலடுக்கு சுழற்சி மற்றும் கிழக்கு திசையில் இருந்து வீசும் வலுவாக காற்றின் காரணமாக சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் பிற்பகல் முதல் மழை கொட்டி தீர்த்து வருகிறது. கடந்த சில வாரங்களாக சென்னையில் பனியும் வறண்ட வானிலையும் நிலவி வந்த நிலையில் இன்று திடீரென கனமழை பெய்துள்ளது. இதனிடையே சென்னையில் கடந்த 7 மணி நேரத்திற்கு மேலாக விடாமல் மழை பெய்து வருகிறது.
இதனிடையே அடுத்த 3 மணி நேரத்திற்கு சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்ப்ட்டு ஆகிய மாவட்டங்களுக்கு ரெட் அலெர்ட் விடுக்கப்பட்டுள்ளது. சென்னை, திருவண்ணாமலை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, திருச்சி ஆகிய மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. இதனிடையே சென்னை புறநகர் பகுதிகளிலும் கனமழை பெய்து வருவதால் சாலைகளில் மழைநீர் தேங்கியது. இதனால் வாகன ஓட்டிகள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகி உள்ளனர்.
பெய்து வரும் தொடர் மழையினால் அண்ணாசாலை உள்ளிட்ட முக்கிய சாலைகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. மேலும் மேட்லி, அரங்கநாதன், கெங்குரெட்டி , ரிசர்வ் வங்கி உள்ளிட்ட சுரங்கபாதைகள் மழை நீர் தேங்கியுள்ளதால் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளன. கே.கே.நகர் - ராஜமன்னார் சாலை, மயிலாப்பூர்- டாக்டர் சிவகாமி சாலை, ஈவிஆர் சாலை, காந்தி இர்வின் சந்திப்பு முதல் டாக்டர் நாயர் பாலம் வரை, செம்பியம்- ஜவஹர் நகர் 20 அடி சாலை, குளத்தூர் விநாயகபுரம் - ரெட் ஹில்ஸ் சாலை, 100 அடி பெரியார் சாலை, நூங்கம்பாக்கம் லேக் வியூ ரோடு உள்ளிட்ட சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.