குமரி கடற்கரைக்கு சுற்றுலா பயணிகள் செல்ல தடை… ஆனா இங்க போலாம்… அதற்கு மட்டும் அனுமதி!!

By Narendran SFirst Published Dec 30, 2021, 9:03 PM IST
Highlights

புத்தாண்டு தினத்தையொட்டி நாளை முதல் கன்னியாகுமரி கடற்கரைக்கு சுற்றுலா பயணிகள் செல்ல தடை விதிக்கப்பட்டு உள்ளது. 

புத்தாண்டு தினத்தையொட்டி நாளை முதல் கன்னியாகுமரி கடற்கரைக்கு சுற்றுலா பயணிகள் செல்ல தடை விதிக்கப்பட்டு உள்ளது. கொரோனா வைரஸ் நோய் தொற்று பரவல் தற்போது அதிகரித்து ஒமைக்ரான் ஆக உருமாறி பரவி வருகிறது. இந்த ஒமைக்ரான் வைரஸ் சமூக பரவலாக மாறிவிட்டதால் அனைவரும் கண்டிப்பாக முக கவசம் அணியும் படியும், சமூக இடைவெளியை தொடர்ந்து பின்பற்றும் படியும் சுகாதாரத் துறையினர் வலியுறுத்தி வருகிறார்கள். இதைத்தொடர்ந்து, அரசு மீண்டும் சில கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. அதன்படி,புத்தாண்டு தின கொண்டாட்டத்தையொட்டி, மக்கள் ஒரே இடத்தில் அதிக அளவில் கூடுவதை தவிர்ப்பதற்காக, நாளை முதல் 2 ஆம் தேதி வரை 3 நாட்கள் கடற்கரை மற்றும் சுற்றுலா தலங்களுக்கு செல்ல தடைவிதிக்கப்பட்டுள்ளது. மேலும், கன்னியாகுமரி கடல் நடுவில் அமைந்துள்ள விவேகானந்தர் நினைவு மண்டபம் மற்றும் 133 அடி உயர திருவள்ளுவர் சிலைக்கும் 2 ஆம் தேதி வரை 3 நாட்கள் தொடர்ந்து படகு போக்குவரத்து ரத்து செய்யப்பட்டுள்ளது.

அதேபோல, நட்சத்திர ஓட்டல்களிலும் கேளிக்கை விடுதிகளிலும் புத்தாண்டு கொண்டாட்டத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. கன்னியாகுமரியில் முக்கடலும் சங்கமிக்கும் திரிவேணி சங்கமம் சங்கிலித்துறை கடற்கரைப் பகுதிக்கு சுற்றுலா பயணிகள் யாரும் செல்லாத வகையில், கன்னியாகுமரி பழைய பஸ் நிலைய ரவுண்டானா சந்திப்பு பகுதியில் போலீசார் தடுப்பு வேலிகள் அமைக்க நடவடிக்கை எடுத்து வருகிறார்கள். அதுமட்டுமின்றி கன்னியாகுமரியில் உள்ள சன்செட் பாயிண்ட் கடற்கரை பகுதிக்கு யாரும் செல்லாத வகையில், நான்கு வழிசாலை முடியும் சீரோபாயிண்ட் பகுதியில் உள்ள சிலுவை நகரில் இருந்து கடற்கரை பகுதிக்கு செல்லும் சாலைகளிலும் போலீசார் தடுப்பு வேலிகள் அமைக்க நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்.

கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவில் வடக்கு நுழைவு வாசல் அருகில் இருந்து கடற்கரைக்கு செல்லும் பாதையும் மூடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுஉள்ளது. கன்னியாகுமரி கடற்கரை பகுதியில் உள்ள கடைகள் மட்டும் மூடப்பட்டு இருக்கும். இதேபோல கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள மற்ற சுற்றுலா தலங்களான வட்டக்கோட்டை பீச், சொத்தவிளை பீச், திக்குறிச்சி பீச், மாத்தூர் தொட்டி பாலம், திற்பரப்பு அருவி, உள்பட அனைத்து சுற்றுலாத்தலங்களுக்கும் நாளை முதல் 3 நாட்கள் சுற்றுலா பயணிகள் செல்ல தடை விதிக்கப்பட்டு உள்ளது. இதையொட்டி, இந்த சுற்றுலாத் தலங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடும் செய்யப்பட்டு உள்ளது. அதேசமயம், புத்தாண்டையொட்டி கோவில்களுக்கு பக்தர்கள் செல்வதற்கு எந்தவித தடையும் இல்லை என்றும் பக்தர்கள் வழக்கம்போல் கோவிலுக்கு சென்று புத்தாண்டு வழிபாடு நடத்தலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

click me!