
வெளி மாநிலத்திற்கு படிக்க போகும் மாணவர்கள் மாநில அரசிடம் முறையான தகவல் தெரிவிக்க வேண்டும் எனவும் அங்கு படிக்கும் மாணவர்களுக்கு பாதுகாப்பு உறுதி செய்யப்படும் எனவும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
திருப்பூரை சேர்ந்த சரத் பிரபு என்பவர் கோவை மருத்துவ கல்லூரியில் எம்.பி.பி.எஸ் படித்துவிட்டு டெல்லியில் யூசிஎம்.எஸ் மருத்துவ கல்லூரியில் எம்.டி படித்து வந்தார்.
இவர் விடுதியில் தங்கியே படித்து வந்தார். இந்நிலையில் சரத் பிரபு இன்று காலை கழிவறையில் சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளார். சரத் பிரபு சடலமாக கிடப்பதை பார்த்த சக மாணவர்கள் கல்லூரி நிர்வாகத்திடம் தகவல் தெரிவித்தனர்.
பின்னர் அங்கு வந்த கல்லூரி நிர்வாகத்தினர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தகவலறிந்து வந்த போலீசார் மாணவரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
கழிவறையில் தனக்கு தானே இன்சுலின் ஊசி செலுத்திக் கொண்டு சரத் பிரபு இறந்துவிட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சில நாட்களுக்கு முன்பு திருப்பூரை சேர்ந்த சரவணன் என்ற மருத்துவ மாணவர் விஷ ஊசி போட்டு இறந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டார். இந்த வழக்கு கொலை வழக்காக விசாரிக்கப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடதக்கது.
இந்நிலையில் செய்தியாளர்களை சந்தித்த முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி வெளி மாநிலத்திற்கு படிக்க போகும் மாணவர்கள் மாநில அரசிடம் முறையான தகவல் தெரிவிக்க வேண்டும் எனவும் அங்கு படிக்கும் மாணவர்களுக்கு பாதுகாப்பு உறுதி செய்யப்படும் எனவும் தெரிவித்தார்.