சிதம்பர ரகசியம் - நிலத்திற்கு அடியிலிருந்து தீட்சிதர்கள் தோண்டியெடுத்து என்ன?

By Thanalakshmi VFirst Published Nov 27, 2021, 7:36 PM IST
Highlights

கடந்த சில தினங்களுக்கு முன்பு சமுக வலைதளங்களில் சிதம்பரம் நடராஜர் கோயிலில் அரிய பொக்கிஷங்கள் கிடைத்ததாக சில புகைப்படங்களுடன் செய்திகள் பரவியது. இந்த நிலையில் சிதம்பர கோவிலில் பொக்கிஷங்கள் ஏதும் கிடைக்கவில்லை என்றும் சமுக வலைதளங்களில் பரவும் செய்தியில் உண்மை இல்லை என்றும் கோயில் நிர்வாகம் மறுப்பு தெரிவித்துள்ளது.
 

புகழ்பெற்ற சிதம்பர நடராஜர் கோவில் தமிழ்நாட்டில் கடலூர் மாவட்டத்திலுள்ள சிதம்பரம் எனும் ஊரில் அமைந்துள்ளது. இக்கோவில் 2000 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டதாகவும், தில்லை என்கிற பெயரில் முன்னோர்களால் அழைக்கப்பட்டதாகவும் சொல்லப்படுகிறது. மேலும் சிதம்பரம் நடராஜர் கோயில் அமைந்திருக்கும் இடமானது உலகின் பூமத்திய ரேகையின் சரியான மையைப் பகுதி என்று கூறப்படுகின்றது. பக்தி இலக்கியத்திலும், சங்க இலக்கியத்திலும் தில்லை சிவபெருமான் பற்றிய குறிப்புகள் காணப்படுகின்றன. மேலும் நடராஜர் சந்நதிக்கு அருகில் அமைந்துள்ள சிதம்பர ரகசிய பீடத்திற்கு, ஒரு சிறிய வாயில் உள்ளது. இதனுள்ளே திருவுருவம் ஏதும் இல்லை. பொன்னாலான வில்வ மாலை மட்டும் சாத்தப்பட்டு சிதம்பர ரகசிய காட்சி பக்தர்கள் பார்வைக்கு காண்பிக்கப்படுகிறது. சிதம்பர ரகசிய பீடத்தின் வாயிலில் உள்ள திரை அகற்றப்பட்டு ஆரத்தி காட்டப்படும்போது, தங்கத்தால் செய்யப்பட்ட வில்வ தளமாலை ஒன்று தொங்கும் காட்சி மட்டுமே தெரியும். அங்கு சிலையோ வேறு காட்சிகளோ தென்படாது.

இவ்வளவு சிறப்பு வாய்ந்த நடராஜர் கோயிலில் புதையல் கண்டெடுக்கப்பட்டதாகவும், அதனை கோவிலை நிர்வகிக்கும் தீட்சிதர்கள் அரசுக்கு தெரிவிக்கவில்லை என்றும் புகைப்பட ஆதாரங்கள் சமூக வலைதளங்களில் தகவல் வைரலாகி வருகிறது.

இந்நிலையில் இக்கோயிலில் கடந்த கரோனா ஊரடங்கு காலகட்டத்தில் சுமார் 5 மாதங்களுக்கு முன்பு மேற்கு கோபுரம் அருகே கற்பக விநாயகர் கோயிலுக்கு எதிரில் உள்ள பைரவர் கோயிலுக்குக் கீழ் புதிய பூங்கா அமைக்கப் பள்ளம் தோண்டப்பட்டுள்ளது. அப்போது அந்த இடத்தின் கீழ் பழங்கால மண்டபம் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. மேலும் இப்பணி இரவு நேரத்தில் நடந்ததால் வெளியில் யாருக்கும் தெரியவில்லை. தற்போது அந்தப் புகைப்படம் வாட்ஸ் அப் மற்றும் சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பள்ளம் தோண்டும்போது பழங்கால பஞ்சலோக சிலைகள், சில அரிய பொக்கிஷங்கள் கிடைத்ததாகவும் கோயில் நிர்வாகம் அதனை வெளியில் தெரிவிக்கவில்லை என்றும் வாட்ஸ் அப் மற்றும் சமூக வலைதளங்களில் செய்தி பரவி வருகிறது. இதனால் சிதம்பரம் பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

இதுகுறித்து சிதம்பரம் நடராஜர் கோயில் பொது தீட்சிதர்களிடம் கேட்டபோது, ''அப்படி எதுவும் கிடைக்கவில்லை, மேற்கு கோபுர உள் வாயில் கீழ் மட்டத்தில் பல நூறு ஆண்டுகளுக்கு முன்பு மண்டபம் இருந்திருக்கலாம் எனவும் நாளடைவில் கோயில் மட்டம் உயரும்போது கீழ் உள்ள மண்டபம் மண்ணால் மூடப்பட்டுள்ளது எனவும் தெரிவித்தார். மேலும் இந்தப் பள்ளம் தோண்டும்போது அரிய பொருட்கள் கிடைத்துள்ளதாக சிலர் தவறாக வாட்ஸ் அப்பில் வதந்தியைப் பரப்பி விட்டுள்ளனர் என்று தெரிவித்தனர்.

click me!