
காசோலை மோசடி வழக்கில் சேரன் மகள் தருமபுரி நீதிமன்றத்தில் நேரில் ஆஜரானார்.
திரைப்பட நடிகரும், இயக்குநருமான சேரன் தனது புதிய படம் ஒன்றை சி2எச் என்ற தொழில்நுட்பம் மூலம் டிவிடி வடிவில் வெளியிட்டார்.
இதற்காக தனது மகள் நிவேதா பிரியதர்ஷிணியை இயக்குநராகக் கொண்ட நிறுவனத்தை தொடங்கினார்.
இந்த நிறுவனத்தில், தருமபுரி மாவட்ட உரிமையை தருமபுரியைச் சேர்ந்த பிரசன்னா வாசுதேவன் என்பவர் பெற்றிருந்தார். இதில், அவருக்கு இழப்பீடு ஏற்பட்டதாகவும், தொகையை தரக் கோரி பிரசன்னா, சேரனை அணுகினார்.
அப்போது, ரூ.4.35 இலட்சத்துக்கான காசோலை பிரசன்னாவுக்கு அந்த நிறுவனம் சார்பில் வழங்கப்பட்டது.
ஆனால், அந்த காசோலை பணமின்றி வங்கியில் இருந்து திரும்பியதால், பிரசன்னா தருமபுரி விரைவு நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தார்.
இந்த வழக்கு விசாரணைக்காக அண்மையில் அழைத்தபோது நிவேதா ஆஜராகவில்லை. இதனால், நீதிமன்றம் அவருக்கு வாரண்ட் பிறப்பித்தது.
இந்த நிலையில், இவ்வழக்கு மீண்டும் நீதிமன்றத்தில் அக்.4 தேதி விசாரணைக்கு வந்தது. அப்போது, சேரனின் மகள் நிவேதா பிரியதர்ஷிணி நேரில் ஆஜரானார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், மீண்டும் வருகிற அக்.14-ம் தேதிக்கு வழக்கு விசாரணையை ஒத்திவைத்து உத்தரவிட்டது.