மருத்துவர் வராததால் இளைஞர் மரணம்’ ஆரம்ப சுகாதார நிலையம் முற்றுகை…

 
Published : Oct 07, 2016, 12:49 AM ISTUpdated : Sep 19, 2018, 02:44 AM IST
மருத்துவர் வராததால் இளைஞர் மரணம்’ ஆரம்ப சுகாதார நிலையம் முற்றுகை…

சுருக்கம்

வால்பாறை சோலையார் நகர் பகுதியில் மருத்துவர் வராததால் இளைஞர் இறந்ததாக கூறி பொதுமக்கள் ஆரம்ப சுகாதார நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினார்கள். மேலும் மருத்துவரின் கார் கண்ணாடி உடைக்கப்பட்டது.

கோவை மாவட்டம் வால்பாறை அருகே உள்ள பன்னிமேடு எஸ்டேட் 2–வது பிரிவு பகுதியைச் சேர்ந்தவர் கருப்பசாமி (27). இவர் சோலையார் நகர் பகுதியில் இரு சக்கர வாகன பழுதுபார்க்கும் கடை நடத்தி வந்தார். இவருடைய மனைவி கவுரி (24). புதன்கிழமை காலை 9.30 மணிக்கு சோலையார் நகரில் உள்ள தனது கடைக்கு கருப்பசாமி வந்தார். அப்போது அவருக்கு நெஞ்சு எரிச்சல் ஏற்பட்டுள்ளது. இதனால் அருகில் உள்ளவர்கள் சோலையார் நகர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு சிகிச்சைக்கு கொண்டு சென்றுள்ளனர்.

ஆனால் அங்கு மருத்துவர் இல்லை. இதனால் அங்கு பணியில் இருந்த செவிலியர்கள் கருப்பசாமிக்கு மாத்திரை மற்றும் கரைசல் பவுடரும் கொடுத்து அனுப்பியுள்ளனர். பின்னர் மெக்கானிக் கடைக்கு வந்த கருப்பசாமி மருத்துவமனையில் கொடுத்த மாத்திரையையும், கரைசல் பவுடரையும் சாப்பிட்டுள்ளார்.

பின்னர், சிறிது நேரத்தில் அவருக்கு வாந்தி ஏற்பட்டுள்ளது. இதனால் மீண்டும் அருகில் இருந்தவர்கள் கருப்பசாமியை சோலையார் நகர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு கொண்டு சென்றுள்ளனர். ஆனால், அப்போதும் அங்கு மருத்துவர் இல்லை. இதனால் செவிலியர்கள் முதலுதவி செய்து வால்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பியுள்ளனர். ஆனால் செல்லும் வழியிலேயே கருப்பசாமி இறந்து விட்டார்.

தொடர்ந்து கருப்பசாமியின் உடலை மீண்டும் சோலையார்நகர் அரசு ஆரம்பசுகாதார நிலையத்திற்கு கொண்டு வந்தனர். மருத்துவமனையில் முன்பு உடலை வைத்து சிகிச்சையளிக்க மருத்துவர் வராததால் தான் கருப்பசாமி இறந்துவிட்டதாக கூறி உறவினர்களும், சோலையார் நகர் இடதுகரை மற்றும் வலது கரை, பன்னிமேடு எஸ்டேட் பகுதியை சேர்ந்த பொதுமக்களும் ஆரம்ப சுகாதார நிலையத்தை முற்றுகையிட்டனர்.

மேலும் அவர்கள் மருத்துவரை கைது செய்ய வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினார்கள். அப்போது அங்கு நின்றிருந்த மருத்துவரின் கார் கண்ணாடியை உடைத்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

இது குறித்து தகவல் அறிந்து அங்கு வந்த வால்பாறை தாசில்தார் கோமதி, காவல்துறை இன்ஸ்பெக்டர் சுப்பிரமணியன், வால்பாறை அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களின் வட்டார மருத்துவர் பிரவிண், நகராட்சி துணைத்தலைவர் மயில்கணேசன், கவுன்சிலர் இந்துமதி ஆகியோர் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

அப்போது பொதுமக்கள் கூறுகையில், “ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு சிகிச்சைக்காக கொண்டு வரப்பட்ட நோயாளிகள் 7 பேர் இறந்துள்ளனர். மருத்துவர் வீட்டில் தனியாக நோயாளிகளுக்கு சிகிச்சையளித்து வருகிறார். அதனால் மருத்துவமனைக்கு சிகிச்சையளிக்க உரிய நேரத்திற்கு பணிக்கு வருவதில்லை, எனவே மருத்துவர் மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்யவேண்டும். அவரை பணி நீக்கம் செய்ய வேண்டும். அப்போது தான் உடலை வாங்குவோம் என்று கூறி தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனை தொடர்ந்து கருப்பசாமியின் மனைவி கௌரி கொடுத்த புகாரின் அடிப்படையில் சேக்கல்முடி காவல்துறை சப்–இன்ஸ்பெக்டர் ராஜேந்திரன் மற்றும் காவல்துறையினர் அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர் ராஜேஸ் வில்சன் மீது வழக்குப்பதிவு செய்தனர்.

மேலும் ஆரம்ப சுகாதார நிலையத்தில் பணியில் இருந்த செவிலியர்களை உடனடியாக மாற்றுவதற்கும், மருத்துவர் ராஜேஸ்வில்சன் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என்று அரசு ஆரம்பசுகாதார நிலையத்தின் வட்டார மருத்துவர் பிரவிணும் உறுதியளித்தார்.

அதன்பின் சேக்கல்முடி காவல்துறையினர் இறந்த மெக்கானிக் கருப்பசாமியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக வால்பாறை அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். இதைத்தொடர்ந்து பொதுமக்கள், உறவினர்கள் முற்றுகையை கைவிட்டு கலைந்து சென்றனர்.

 

PREV
click me!

Recommended Stories

தவெக கூட்டத்தில் உணவு கிடையாது.. தண்ணீர் பாட்டில் மட்டும்தான்.. செங்கோட்டையன் விளக்கம்
தொடர் விடுமுறை.. சொந்த ஊர் போறீங்களா?.. போக்குவரத்துக்கழகம் சொன்ன குட்நியூஸ்..!