
திருநங்கைகளுக்கு சிறப்பு திட்டம் :
திருநங்கைகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த கூடிய வகையில் இந்த திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. திருநங்கைகள் உயர் கல்வி பயில்வதை ஊக்குவிக்கும் வகையில் இந்த திட்டம் செயல்படுவதாக சென்னை பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது. திருநங்கைகள் பேருந்து நிலையங்கள் ரயில் நிலையங்கள் மற்றும் பொது இடங்களில் பொதுமக்களிடம் பணம் கேட்பது மற்றும் பாலியல் தொழிலில் ஈடுபடுவது போன்றவற்றில் ஈடுபடுகின்றனர்.
இதன்காரணமாக திருநங்கைகள் பல்வேறு பிரச்சினைகளை சந்திக்க நேரிடுகின்றது இவ்வாறான பிரச்சினைகளிலிருந்து அவர்களை மாற்றி வாழ்வில் நல்லதொரு பாதையில் அவர்களை பயணிக்க செய்யும் விதமாக இந்த திட்டம் செயல்படுத்தப்படும் என சென்னைப் பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது. ஏற்கனவே திருநங்கைகள் மெட்ரோ ரயில் நிலையங்கள் சில தனியார் நிறுவனங்களில் பணிபுரிந்து வருகின்றனர்.
சென்னை பல்கலைக்கழகம் அறிவிப்பு :
உயர்கல்வி பயின்று அதன் காரணமாகவே திருநங்கைகளுக்கு சில இடங்களில் பணி பெறுவதற்கு வாய்ப்பு கிடைத்திருக்கின்றது. மற்ற திருநங்கைகளும் இதுபோன்ற பணி வாய்ப்பினை பெறுவதற்கு ஏற்றவகையில் உயர்கல்வியில் தலா ஒவ்வொரு கல்லூரியிலும் ஒரு இடம் ஒதுக்கப்படும் என சென்னை பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.
சென்னை பல்கலைக்கழகத்திற்கு உட்பட்ட 131 கலை அறிவியல் கல்லூரிகளிலும் தலா ஒரு இடங்கள் திருநங்கைகளுக்கு ஒதுக்கப்படும் என்றும் இந்த நடைமுறை வரும் கல்வி ஆண்டிலிருந்து அமலுக்கு வரும் எனவும் துணைவேந்தர் தெரிவித்துள்ளார். சென்னை பல்கலைக்கழகத்தில் திருநங்கைகளுக்கு முதுகலை பட்டப்படிப்பு இலவசமாக வழங்கப்படும் என்று ஏற்கனவே சென்னை பல்கலைக்கழகம் தெரிவித்திருந்த நிலையில் தற்போது இளங்கலை படிப்புகளிலும் ஒவ்வொரு கல்லூரியிலும் தலா ஒரு இடம் ஒதுக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.