
சென்னையில் இன்று முழுவதும் அவ்வப்போது இடைவெளி விட்டு மழை பெய்யும். ஒரு சிலநேரங்களில், ஆங்காங்கே கனமழையும் பெய்யக்கூடும் என தமிழ்நாடு வேதர்மன் தனது முகநூலில் பதிவிட்டுள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில்... சென்னையில் இன்று முழுவதும் அவ்வப்போது இடைவெளி விட்டு மழை பெய்யும். நாளை முதல் மழை குறையத்தொடங்கும். குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதியில் இருந்து நமக்கு இன்றுதான் கடைசிகட்ட மழை கிடைக்கும். காற்றழுத்த தாழ்வுப்பகுதி வடக்கு நோக்கி நகரத் தொடங்கிவிட்டது.
சென்னையைப் பொருத்தவரை இன்று இரவு முழுவதும் அவ்வப்போது மழை இடைவெளிவிட்டு பெய்யும். ஒரு சிலநேரங்களில், ஆங்காங்கே கனமழையும் பெய்யக்கூடும்.
சென்னை கடற்கரைப்பகுதிக்கு அருகே மிகப்பெரிய மேகக்கூட்டம் வந்திருப்பதை ராடார் படத்தைப் பார்த்தால் உங்களுக்கு தெரியும். இதேபோன்ற மேகக்கூட்டங்கள்தான் நேற்று இரவும் இருந்தது. ஆனால், இன்று நிலைமை வேறு.
நான் இணைத்துள்ள படங்களைப் பார்தால் நான் என்ன சொல்ல வருகிறேனோ அது குறித்து உங்களுக்கு ஒரு தெளிவு கிடைக்கும். குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி மேலே நகர்ந்து வரும் அதே வேளையில், நம்முடைய கிழக்குப்பகுதியை நோக்கியும் தாழ்ந்து செல்வது தெரியும். இதன் மூலம் சென்னையின் வடபகுதிமீது மேகக்கூட்டங்கள் பரவலாகும்.
ஆதலால், சென்னையில் இன்று முழுவதும் பெய்யும் மழையை அனுபவியுங்கள். இந்த ஆண்டிலேயே இன்றுதான் மிகவும் குளிர்ச்சியான நாளாக இருக்கப்போகிறது. 25 டிகிரி செல்சியஸ் மட்டுமே இருக்கிறது. சென்னையில் 25 டிகிரி செல்சியஸ் என்றால் நம்ப முடிகிறதா.
.
ராமநாதபுரம் பகுதியில் மழை..
குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி நகர்வதன் காரணமாக, ராமநாதபுரம் பகுதியில் மழை இருந்தது. இன்று இதேசூழல் இருப்பதால், சிவகங்கை, புதுக்கோட்டை, திருவாரூர், நீலகிரி, கோவை, திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களில் சில இடங்களில் மிதமான மழை இருக்கும். மழை பரவலாக இருக்காது. அதிகமான மழையையும் எதிர்பார்க்க முடியாது.