
சென்னையில் இருந்து பாங்காங்கிற்கு விமானத்தில் செல்ல வசூலிக்கப்படும் கட்டண தொகையைவிட மதுரை, திருச்சி, தூத்துக்குடி செல்ல அதிகமாக கட்டணம் வசூலிக்கப்படுகிறது.
பொங்கல் பண்டிகையையொட்டி, சென்னையில் உள்ள மற்ற மாவட்டத்தை சேர்ந்தோர், தங்கள் ஊர்களுக்கு செல்லத் தொடங்கி உள்ளனர். வெளியூர்
செல்லும் பயணிகளுக்காக தற்காலிக பேருந்து நிறுத்தங்களை, தமிழக போக்குவரத்து துறை அறிவித்துள்ளது.
கடந்த ஒரு வாரகாலமாக போக்குவரத்து தொழிலாளர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வேலை நிறுத்த போராட்டம் நடத்தி வந்தனர். நீதிமன்ற உத்தரவுக்குப் பிறகு, தொழிற்சங்கத்தினர் வேலை நிறுத்தத்தை வாபஸ் பெற்றனர். இதனை அடுத்து, இன்று காலை முதல் பேருந்துகள் வழக்கம்போல் இயங்கி வருகிறது.
உள்ளூர் மற்றும் வெளியூர் செல்லும் பேருந்துகள் இன்று காலை முதல் வழக்கம்போல் இயக்கப்பட்டு வருகிறது. இதனால் சென்னையில் இருந்து மற்ற மாவட்டங்களுக்கு செல்வோர் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
நாளை மறுநாள் பொங்கல் பண்டிகை கொண்டாடப்பட உள்ள நிலையில், சென்னையில் இருந்து மற்ற மாவட்டங்களுக்கு செல்வோர், அரசு மற்றும் தனியார் பேருந்துகள், ரயில்கள் மற்றும் விமானங்கள் மூலமாக செல்ல தயாராகி வருகின்றனர்.
வசதி படைத்தவர்கள், தொழில் அதிபர்கள், மதுரை, திருச்சி, கோவை, தூத்துக்குடி போன்ற நகரங்களுக்கு விமானங்களில் செல்ல முன்பதிவு செய்து வருகிறார்கள்.
விமான கட்டணம் என்பது பல மாதங்களுக்கு முன்பாகவே பதிவு செய்பவர்களுக்கு வழக்கமான கட்டணத்துடன் சில விமான நிறுவனங்கள் கட்டண சலுகையும் வழங்குகின்றன. வாரங்கள், நாட்கள் என குறையக் குறைய விமான முன்பதிவு கட்டணமும் அதிகரிக்கிறது.
பொங்கல் பண்டிகை நெருங்கும் நிலையில், சென்னையில் இருந்து மதுரைக்கு செல்ல விமான கட்டணம் ரூ.9000 முதல் ரூ.17,000 வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
அதேபோல், சென்னையில் இருந்து தூத்துக்குடிக்கு விமானத்தில் செல்ல ரூ.19,000 ஆக உயர்ந்துள்ளது. திருச்சிக்கு விமானத்தில் செல்ல ரூ.20,000 ஆக உயர்ந்துள்ளது.
ஆனால், சென்னையில் இருந்து கோலாலம்பூருக்கு விமானதில் செல்ல விமான கட்டணம் ரூ.11,900-ல் இருந்து ரூ.16,199 வரை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. நாளை கோலாலம்பூர் செல்ல ரூ.7,900 முதல் ரூ.11,000 வரை கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. கொழும்பு செல்ல ரூ,7,000 முதல் ரூ,13,000 வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
கோலாலம்பூர், பாங்காங், கொழும்புவுக்கு சென்னையில் இருந்து விமானத்தில் செல்ல நிர்ணயிக்கப்பட்டுள்ள கட்டணத்தைவிட, மதுரை, திருச்சி, தூத்துக்குடிக்கு அதிக கட்டணம் வசூலிக்கப்பட்டுள்ளது.
எதற்காக இந்த கட்டண உயர்வு ஏற்பட்டுள்ளது என்றால், பொங்கல் பண்டிகைக்கு ஏராளமானோர் முன்பதிவு செய்துள்ளதால் இந்த கட்டண உயர்வு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
போக்குவரத்து கழகங்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டிருந்த நிலையில், ஏற்கனவே ரயில், விமானம் என முன்பதிவு செய்திருந்தனர். அதன் காரணமாகத்தான் இந்த உயர்வு ஏற்பட்டதாகவும் டிராவல்ஸ் ஏஜென்சிகள் கூறுகின்றனர்.