நெல்லை - சென்னை வந்தே பாரத் ரயில்: ஆக.,6ஆம் தேதி தொடங்கி வைக்கும் பிரதமர் மோடி!

By Manikanda PrabuFirst Published Jul 31, 2023, 4:15 PM IST
Highlights

சென்னை - திருநெல்வேலி வந்தே பாரத் ரயில் சேவையை வருகின்ற ஆகஸ்ட் 6ஆம் தேதி பிரதமர் நரேந்திர மோடி துவக்கி வைக்கவுள்ளார்

வந்தே பாரத் ரயில் என்பது மேக் இந்தியா திட்டத்தின் கீழ் உள் நாட்டில் வடிவமைக்கப்பட்டு தயாரிக்கப்பட்ட செமி ஹைஸ்பீடு, சுய உந்துதுதல் மூலம் இயக்கப்படும் ரயில் ஆகும். மிக வேகமாகவும், பயணிகளை விரைவாக கொண்டு சேர்க்கும் வகையிலும் இந்தியாவில் வந்தே பாரத் ரயில்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன. 2019ஆம் ஆண்டில் வந்தே பாரத் அதிவேக ரயில்கள் அறிமுகப்படுத்தப்பட்டன.

பிரதமர் மோடி ‘மேக் இன் இந்தியா’ திட்டத்தை அறிமுகம் செய்த 18 மாதங்களுக்கு பின்னர் இந்த வந்தே பாரத் ரயில் திட்டம் ரூ.100 கோடியில் உருவாக்கப்பட்டது. தற்போது இயக்கப்பட்டு வரும் வந்தே பாரத் ரயில் 16 பெட்டிகளை கொண்டதாகவும், 14 சேர்கார் பெட்டிகளையும், 2 சொகுசு இருக்கைகள் கொண்ட பெட்டியாகவும் உருவாக்கப்பட்டு உள்ளது.

முதல் வந்தே பாரத் ரயிலின் தொடக்க ஓட்டத்தை கடந்த 2019ஆம் ஆண்டு ஜூன் மாதம் மோடி கொடியசைத்துத் துவக்கி வைத்தார். டெல்லி முதல் வாரணாசி வரை மற்றும் டெல்லி முதல் கத்ரா வரை என 2 வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்பட்டு வந்த நிலையில், வந்தே பாரத் ரயில்கள் நாடு முழுவதும் ஒவ்வொரு மாநிலமாக அறிமுகப்படுத்தப்பட்டு வருகின்றன. வந்தே பாரத் ரயில் சேவையை அந்தந்த மாநிலங்களுக்கு நேரில் சென்று பிரதமர் மோடி கொடியசைத்து தொடங்கி வைத்து வருகிறார். நாடு முழுவதும் தற்போது மொத்தம் 25 வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன.

அந்த வகையில், சென்னை - திருநெல்வேலி வந்தே பாரத் ரயில் சேவையை வருகின்ற ஆகஸ்ட் 6ஆம் தேதி பிரதமர் நரேந்திர மோடி துவக்கி வைக்கவுள்ளார்.

 

Tirunelveli <-> Chennai Vande Bharat train will be inaugurated on 06th August 2023 pic.twitter.com/CBmxHpgbTN

— Tirunelveli (@Porunaicity)

 

தமிழ்நாட்டை பொறுத்தவரை, சென்னை - மைசூரு, சென்னை - கோவை ஆகிய இரண்டு வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்படுகின்றன. சென்னை - மைசூரு இடையே ஜோலார்பேட்டை பெங்களூரு வழியாக செல்லும் தென்னிந்தியாவின் முதல் வந்தே பாரத் ரயிலை பிரதமர் மோடி கடந்த ஆண்டு துவக்கி வைத்த நிலையில், சென்னை - திருநெல்வேலி இடையே வந்தே பாரத் ரயில் சேவை ஆகஸ்ட் 6ஆம் தேதி துவங்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளதால், தென்மாவட்ட மக்கள் மிகுந்த மகிழ்ச்சியடைந்துள்ளனர். 

Foxconn : 6000 பேருக்கு வேலை ரெடி.. காஞ்சிபுரத்தில் ரூ.1600 கோடியில் புதிய ஃபாக்ஸ்கான் ஆலை !!

சென்னை - திருநெல்வேலி இடையே இயக்கப்படும் வந்தே பாரத் ரயிலானது, திருச்சி - மதுரை ரயில் நிலையங்களில் நின்று செல்லும். வழக்கமாக நெல்லை எக்ஸ்பிரஸ் ரயில் சென்னை சென்றடைய 10 மணி நேரம் 10 நிமிடங்கள் எடுத்துக்கொள்கிறது. தற்போது வந்தே பாரத் ரெயில் இயக்கப்பட்டால் 8 மணி நேரத்திற்குள் சென்றடையும். வந்தே பாரத் ரயிலில் ஏசி சேர் கார், எக்கனாமிக் சேர் கார் ஆகிய 2 வகுப்புகள் உள்ளன. இந்த ரயிலில் ஒரே நேரத்தில் மொத்தம் 552 பயணிகள் பயணிக்க முடியும் என தகவல் வெளியாகியுள்ளது.

வந்தே பாரத் ரயில் காலை 6 மணிக்கு நெல்லையில் இருந்து புறப்பட்டு மதியம் 2 மணிக்கு சென்னை சென்றடையும் எனவும், மறுமார்க்கமாக சென்னையில் இருந்து மதியம் 3 மணிக்கு புறப்பட்டு, இரவு 10.30 மணிக்கு நெல்லை வந்தடையும் வகையில் இயக்கப்பட உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இந்த நேரம் அதிகாரப்பூர்வமாக இன்னும் உறுதி செய்யப்படவில்லை.

click me!