
வேலை ஒரு பக்கம் இருந்தாலும் எல்லோரோடும் சந்தோஷமா பேசி, சிரிச்சிட்டு இருந்த இடம் இன்று கருகி நொறுங்கி கிடக்குதே என சென்னை சில்க்ஸில் வேலை பார்த்த பணியாளர்கள் அடக்க முடியாத தன் குமுறலை வெளிபடுத்தியுள்ளனர்.
சென்னை திநகரில் உள்ள சென்னை சில்க்ஸ் கட்டடம் நேற்று முன்தினம் திடீரென தீப்பிடித்து எரிந்தது. இதற்கு மின்கசிவு தான் காரணம் என தெரிவிக்கப்பட்டது.
ஆனால் நேரம் கடக்க கடக்க தீ மேலும் மேலும் பயங்கரமாக பரவி கொழுந்து விட்டு எரிய தொடங்கியது. தகவலறிந்து வந்த தீயணைப்பு துறையினர் எவ்வளவு முயன்றும் 2 நாட்களுக்கு தீயை அணைக்க முடியவில்லை.
30 லட்சம் ரூபாய்க்கு தண்ணீர் வரவழைத்தும் தீயை கட்டுக்குள் கொண்டுவர முடியவில்லை. இதனால் அந்த கட்டிடமே நிலை குலைந்து போயுள்ளது.
இதைதொடர்ந்து அந்த கட்டிடங்களை இடிப்பதற்கான ஆயத்த பணிகள் நடைபெற்று வருகின்றன.
இதனிடையே அந்த கடையில் வேலை பார்த்த பணியாளர்களின் கதி என்னவென்று யோசித்து பார்த்தோம்.
இரண்டு நாட்களுக்கு முன்பு வரை தக தக வென மின்னிக்கொண்டிருந்த சென்னை சில்க்ஸ் கட்டிடம் தற்போது காய்ந்த கருவாடாய் காட்சியளிக்கிறது.
வாரம் ஒருமுறை, மாதம் இருமுறை என எப்போதாவது சென்னை சில்க்ஸ் சென்று வரும் பொதுமக்களுக்கே அந்த காட்சியை காண மனம் கலங்குகிறது. தினமும் சென்று வேலை பார்த்து புது நண்பர்களுடன் பழகி, ஒரு குடும்பம் போல் சிரித்து பேசி விளையாடி கொண்டிருந்த பணியாளர்களுக்கு எப்படி இருக்கும் என்பதை நினைத்து பார்க்க கூட மனம் தயங்குகிறது.
இதுகுறித்து அவர்களிடம் கேட்டு பார்க்கலாம் என சென்னை எரிந்து அடங்கிய சில்க்ஸ் பக்கம் சென்றோம். ஆனால் அங்கு பணியாளர்களை பார்க்க முடியவில்லை.
இதையடுத்து அங்கு கண்ணில் தென்பட்ட பணியாளர் ஒருவர் “இங்க இருக்குற யாரும் எதுவும் பேச மாட்டாங்க. வேளச்சேரியில இருக்குற கடைக்கு போங்க... இந்தக் கடையில இருந்தவங்க எல்லாரையும் அங்கதான் மாத்தி விட்டுருக்காங்க” என்று கூறினார்.
அதனால் வேளச்சேரிக்குப் வண்டியை கிளப்பினோம். அங்கு இருந்த ஒரு பெண் ஊழியர் பேசியதாவது :
நான் சென்னை வந்து 4 ஆண்டு ஆகிறது. என் சொந்த ஊர் திருநெல்வேலி. இரண்டு வேளை சாப்பாட்டுக்கே சிரமப்பட்டுக்கிட்டு இருந்தோம்.
இங்கு வேலைக்கு வந்த பிறகு தான் வீட்டுக்கே பணம் அனுப்பி வைக்க முடிகிறது. நகையில் இத்தனை டிஸைன் இருக்குனு இங்கு வந்து பார்த்த போது தான் தெரிந்தது.
சில நகைகள் விலை அதிகமா இருக்கும், அதெல்லாம் பார்க்கும்போது ஆச்சர்யமா இருக்கும். அந்த நகை நல்லா இருக்கு. இது நல்லா இல்ல. இந்த டிரெஸ் சூப்பரா இருக்குனு என்கூட வேலைப் பார்க்கிற நண்பர்கள் கூட பேசிட்டு இருப்போம்.
வலை ஒரு பக்கம் இருந்தாலும் இவ்வளவு நாள் பேசி பழகி கொண்டிருந்த இடம் கருகி நொறுங்கி போய் கிடக்குதே என கதறி அழுதார்.
மேலும், நேற்று காலையில் 4 மணிக்கு கடையில் தீப்புடிச்சிடுச்சுன்னு எங்களுக்கு மெசேஜ் வந்தது.
சரி, ஏதோ சின்னதா இருக்கும். கொஞ்ச நேரத்துல சரியாகிடும், மதியத்துக்கு மேல வேலைக்குப் போயிடலாம்னு நினைச்சிக்கிட்டு இருந்தோம். ஆனா, அடுத்தடுத்து வந்த மெசேஜ்லாம் பார்த்தப்ப நெஞ்சு பதற ஆரம்பிச்சுடுச்சு. எங்களுக்கு என்ன செய்யறதுன்னே தெரியல.
இவ்வாறு அவர் குமுறினார்.
இதுகுறித்து பேசிய சென்னை சில்க்ஸ் நிர்வாகி ஒருவர் கூறுகையில், கடைகளில் இருந்த நகைகள் எல்லாம் பணிகள் முடிந்து வரும்போது லாக்கரில் வைத்துவிட்டு வருவது வழக்கம். இன்னும், அந்த லாக்கர் திறக்கப்படவில்லை.
திறந்தால் தான், என்ன நடந்திருக்கிறது என்பது தெரியவரும். மேலும் இங்கு பணிபுரியும் 1600ஊழியர்களுக்குண்டான மாற்றுவேலையை உடனடியாக ரெடி செய்து கொடுப்பது தான், எங்களுக்குண்டான மிகப்பெரிய சவால். அதையும் சிறப்பாக செய்வோம்' என்றார்.