சேலம் - சென்னை 8 வழிச்சாலை சீனப் பெண்களுக்கு பயன்படுமாம்! அவசரம் அவசரமாக அள்ளித் தெளிக்கும் பிழைகள்...

First Published Jul 23, 2018, 4:23 PM IST
Highlights
Chennai-Salem Expressway A Feasibility Report


சேலம் - சென்னை பசுமைவழி சாலை என்கிற பெயரில், பசுமையை அழிக்கும் சாலையை அவசரம் அவசரமாக தமிழ்நாட்டின் மீது திணிக்க முயற்சிக்கும் இந்திய அரசு - பலப்பல பிழையான தகவல்களை அவசரக் கோலத்தில் அள்ளித் தெளித்துவருகிறது என பசுமைத்தாயகம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து வெளியிட்டுள்ள முகநூல் பதிவில்...  இந்தச் சாலை சீனப் பெண்களுக்கு பயன்படும் என்றும், இந்தச் சாலை பெங்களூரில் போடப்படும் என்றும் இந்திய அரசின் அதிகாரப்பூர்வ அறிக்கைகளும் உத்தரவுகளும் கூறுகின்றன! அதுகுறித்த விவரங்கள் கீழே:


"சேலம் - சென்னை 8 வழிச்சாலை: சீனப்பெண்களுக்கு பயன்படுமாம்!"
 

சேலம் - சென்னை 8 வழிச்சாலை குறித்து இந்திய அரசின் தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் வெளியிட்டுள்ள, இந்த திட்டம் 'செயல்முறையில் சாத்தியமா' என்பது குறித்த (Feasibility Report) அறிக்கையில் - இந்த சாலை அமைக்கப்பட்டால்,சீனாவின் ஷான்க்ஷி மாகாணத்தில் (Shaanxi province of China) உள்ள ஷியான் (Xi’an) எனும் ஊரில் உள்ள பெண்கள் போக்குவரத்து வசதிகளைப் பெறுவார்கள் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

சேலம் - சென்னை இடையே சாலை அமைக்கப்பட்டால், அதில் சீனாவின் ஷான்க்ஷி மாகாணத்தில் வசிக்கும் பெண்கள் எவ்வாறு பயணம் செய்வார்கள் என்பது இந்திய பேரரசுக்கு மட்டுமே தெரிந்த ரகசியம் பொலிருக்கிறது!

"சேலம் - சென்னை 8 வழிச்சாலை: பெங்களூரில் போடப்படுமாம்!"

சேலம் - சென்னை 8 வழிச்சாலை குறித்து சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு அறிக்கையை தயாரிக்க இந்திய அரசின் சுற்றுச்சூழல் அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது (Terms of Reference -ToR- for conducting an environment impact assessment -EIA- study). அந்த உத்தரவில் பெங்களூரில் தொடங்கி கோலார் அருகில் உள்ள என்.ஜி.ஹல்கூர் வரை இந்த சாலையை அமைக்க சுற்றுச்சூழல் தாக்க அறிக்கையை தயாரித்து அளிக்க கூறியுள்ளது!

அதாவது, சேலம் - சென்னை இடையே சாலை அமைக்கும் திட்டத்தில், பெங்களூரில் சாலை அமைப்பதால் ஏற்படும் சுற்றுச்சூழல் பாதிப்புகள் குறித்து அறிக்கை அளிக்கும் படி தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையத்தை கேட்டுள்ளது இந்திய அரசின் சுற்றுச்சூழல் அமைச்சகம்.

சேலம் - சென்னை இடையே சாலை அமைக்கப்பட்டால் - அதில் பெங்களூருக்கும் கோலாருக்கு இடையே எப்படி சாலை அமைக்க முடியும் என்பது இந்திய பேரரசுக்கு மட்டுமே தெரிந்த ரகசியம்  போலிருக்கிறது!

- இப்படியாக, அவசர கோலத்தில் அபத்தமாக உத்தரவுகளை வெளியிட்டு, இந்திய அரசு நிர்வாக அமைப்பையே நகைப்புக்குரியதாக்கி வருகிறது மோடி அரசு!

'சாலை அமைத்தால் என்ன? அமைக்காமல் போனால் என்ன? 2019 தேர்தலுக்கு முன்பாக ரூ. 10,000 கோடி ஒப்பந்தத்தை இறுதிசெய்ய வேண்டும்' என்பது மட்டுமே ஒரே லட்சியமாக இருந்தால் எல்லாம் தப்பும் தவறுமாகத்தான் நடக்கும்!

ஆசை வெட்கம் அறியாது என்பது இதுதான் போலிருக்கிறது!

click me!