
மதுவால் இறந்ததாகக் கருதிய டிரைவரின் மரணத்தில் அதிரடி திருப்பம் ஏற்பட்டுள்ளது. மதுவில் சயனைடு கலந்து அவரை இளம்பெண் ஒருவர் நண்பர் மூலம் கொலை செய்ததாக தகவல் வெளியாகியுள்ளது. இது தொடர்பாக கள்ளக்காதலி மற்றும் அவரது நண்பரை போலீசார் கைது செய்துள்ளனர். சென்னை மதுரவாயல் பகுதியில் சேர்ந்த ராஜேஷ் கால்டாக்சி டிரைவராக பணியாற்றி வருகிறார். இவர் மனைவியின் பெயர் நளினி. ராஜேஷுக்கு குடிப்பழக்கம் உள்ளவர்.
கடந்த 15-ம் தேதி இரவு வேலை முடிந்து நள்ளிரவாகியும் ராஜேஷ் வீடு திரும்பவில்லை. பிறகு அவரது செல்போனுக்கு தொடர்பு கொண்ட போது அதே பகுதியை சேர்ந்த குமரேசன் என்பவர் எடுத்து குடிபோதையில் காருக்குள் மயங்கி கிடப்பதாக நளினிக்கு தகவல் தெரிவித்தார். இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த மனைவி குமரேசனின் உதவியுடன் காரில் ராஜேஷை வீட்டுக்கு அழைத்து வந்துள்ளார்.
அவர் தன்னை மீறி மது அருந்தியதால் வீட்டிற்குள் அழைத்து வரமுடியாததால் மனைவி நளினி கணவர் ராஜேஷை காரிலேயே படுக்க வைத்துவிட்டார். இந்நிலையில் மறுநாள் காலையில் வாயில் நுரை தள்ளிய நிலையில் ராஜேஷ் இறந்து கிடந்தார். இதுதொடர்பாக மதுரவாயல் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு விசாரணை நடத்தப்பட்டது. பிறகு அவரது உடலை அரசு பொது மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். பிரேத பரிசோதனை முடிந்து உடல் அடக்கம் செய்யப்பட்டது.
இந்நிலையில் பிரேத பரிசோதனை அறிக்கை போலீசாருக்கு கிடைத்தது. ராஜேஷ் குடித்த மதுவில் விஷம் கலந்திருப்பதாக அதிர்ச்சி செய்தி வெளியானது. இது தொடர்பாக குமரேசனை பிடித்து விசாரித்தனர். விசாரணையில் ஆலப்பாக்கம் பகுதியை சேர்ந்த பத்மாவதி (30) என்ற பெண்ணுடன் ராஜேஷுக்கு கள்ளத்தொடர்பு இருந்தது தெரிவந்தது. இவர் அடிக்கடி மதுபோதையில் வந்து பத்மாவதிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.
இதுகுறித்து தனது மற்றொரு ஆண் நண்பரான குமரேசனிடம் கூறி, அவரை கொல்ல வேண்டும் எனக் கூறியுள்ளார். இதையடுத்து, ஆலப்பாக்கம் பிரதான சாலையில் உள்ள டாஸ்மாக் கடையில் ராஜேஷ் மது அருந்தியபோது, அங்கு வந்த குமரேசன், ராஜேஷ் குடித்த மதுவில் விஷத்தை கலந்துவிட்டதாக போலீசில் குமரேசன் வாக்குமூலம் அளித்துள்ளார். இதைத் தொடர்ந்து மதுரவாயல் போலீசார் கொலை வழக்காக பதிவு செய்து, குமரேசன், பத்மாவதி ஆகிய இருவரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.