
ெசன்னையில் மாரடைப்பு ஏற்பட்டு காரில் உயிருக்கு போராடிய தொழிலதிபரை போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் சரியான நேரத்துக்கு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று உயிரைக் காப்பாற்றியுள்ளார்.
சென்னை தி.நகரைச் சேர்ந்தவர் விகாஷ். தொழிலதிபரான விகாஷ் புதன்கிழமை பழைய மகாபலிபுரம் சாலையில் இருந்து தனது வீட்டுக்கு காரில் சென்றார். அப்போது, டைடல் பார்க் சிக்னல் அருகே வந்தபோது, விகாஷுக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டது. இதனால், தனது காரை சாலை ஓரத்தில் நிறுத்திவிட்டு உதவிக்காக விகாஷ் கூக்குரலிட்டார்.
போக்குவரத்து பணியை ஒழுங்குபடுத்தும் பணியில் இருந்த போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் சி.கே.ரவி இதைப் பார்த்து ஓடிவந்தார். அங்கு வந்து பார்த்தபோது, விகாஷ் மூச்சு விடமுடியாமல் உயிருக்கு போராடிக்கொண்டு இருப்பதைப் பார்த்தார்.
இதையடுத்து, உடனடியாக கான்ஸ்டபிள் சம்பத் என்பவரை உதவிக்கு அழைத்து விகாஷை பின் இருக்கையில் அமரவைத்து பிடிக்கச் சொல்லி, காரை மருத்துவமனைக்கு ஓட்டிச் சென்றார். ஆனால், சிறிது நேரத்தில் விகாஷ் சுயநினைவு இழந்தார். இருப்பினும், அடையாற்றில் உள்ள தனியார்மருத்துவமனைக்கு விகாஷை விரைவாக கொண்டு சென்ற போலீசார் அவரை அவசர சிகிச்சை பிரிவில் சேர்த்தனர்.
சரியான நேரத்துக்கு கொண்டு செல்லப்பட்டதால், விகாஷுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இதன் காரணமாக, விகாஷ் உயிர் காப்பாற்றப்பட்டது.
இது குறித்து போலீஸ் இன்ஸ்பெக்டர் ரவி கூறுகையில், “ நான் காரில் பார்க்கும் போது, விகாஷ் மூச்சு விட மிகுந்த சிரமப்பட்டார். உடனடியாக கான்ஸ்டபிள் சம்பத்தை அழைத்து விகாஷை பின் இருக்கையில் அம ரவைத்து, காரை நான் ஓட்டி அடுத்த 10 வது நிமிடத்தில் மருத்துவமனையில் சேர்த்தேன்” என்றார்.
இதய சிகிச்சை மருத்துவர் மனோகரன் சுமிதாவிடம் கூறுகையில், “ போலீஸ் இன்ஸ்பெக்டர் ரவி இன்னும் 2 நிமிடங்கள் தாமதமாக விகாஷை கொண்டு வந்திருந்தால், அவரை காப்பாற்றியிருப்பது கடினம் என்று தெரிவித்தார்.
போக்குவரத்து போலீஸ் இணை கமிஷனர் பிரேம் ஆனந்த் சின்ஹா, துணை கமிஷனர் மகேஷ்வர் ஆகியோர் போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் சி.கே. ரவி, சம்பத் ஆகியோரின் செயலுக்கு பாராட்டு தெரிவித்தனர்.