சென்னை மெட்ரோ ரயில் இரண்டாம் கட்டத்தில் 15 ரயில் நிலையங்களில் வழித்தடம் மாறும் வசதி அமைக்கப்பட உள்ளது
சென்னை மாநகரில் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் வகையில், மெட்ரோ ரயில் திட்டம் உருவாக்கப்பட்டு செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதில், முதல் கட்டமாக விமான நிலையம் முதல் விம்கோ நகர் வரையும், பரங்கிமலை முதல் சென்னை சென்ட்ரல் வரையும் 2 வழித்தடங்களில் 55 கி.மீ. தொலைவில் 52 மெட்ரோ ரயில்கள் இயக்கப்படுகின்றன.
அதன் தொடர்ச்சியாக, சென்னை மெட்ரோ ரயில் இரண்டாம் கட்ட திட்டப் பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகின்றன. இரண்டாம் கட்டமாக 116.1 கி.மீ. தொலைவிற்கு 3 வழித்தடங்களில் செயல்படுத்தப்படவுள்ளது. 45.4 கி.மீ. தொலைவுக்கு மாதவரம் - சிறுசேரி வரை 3ஆவது வழித்தடத்திலும், 26.1 கி.மீ. தொலைவுக்கு கலங்கரை விளக்கம் - பூந்தமல்லி வரை 4ஆவது வழித்தடத்திலும், 44.6 கி.மீ தொலைவுக்கு மாதவரம் - சோழிங்கநல்லூர் வரை 5ஆவது வழித்தடத்திலும் பணிகள் நடைபெற்று வருகின்றன.
இந்தப் பணிகளை 2025ஆம் ஆண்டு இறுதிக்குள் முடித்து, மெட்ரோ ரயில்களை இயக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மேற்கண்ட வழித்தடங்களில் மெட்ரோ ரயில் சேவையை தொடங்கும் பொருட்டு, உயர்மட்டபாதை, சுரங்கப்பாதை, ரயில் நிலையம், இணைப்பு பாதைகள் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.
1 கிலோ தக்காளி ரூ.60 மட்டுமே.. ரேஷன் கடைகளில் தக்காளி விற்பனை தொடங்கியது
இந்த நிலையில், இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்டத்தில் 15 ரயில் நிலையங்களில் வழித்தடம் மாறும் வசதி அமைக்கப்படவுள்ளது. இதுகுறித்து சென்னை மெட்ரோ ரயில் நிறுவன அதிகாரிகள் கூறியதாவது: “தற்போதுள்ள பேருந்து, ரயில் நிலையங்கள், ஏற்கெனவே இருக்கும் மெட்ரோ ரயில் நிலையங்களை இணைக்கும் விதமாக இரண்டாம் கட்ட மெட்ரோ பணிகள் நடைபெற்று வருகின்றன. மாதவரம், கீழ்ப்பாக்கம், மயிலாப்பூர், சோழிங்கநல்லூர், போரூர், ஆலப்பாக்கம், காரம்பாக்கம், வளசரவாக்கம், ஆழ்வார்திருநகர், சிஎம்பிடி, திருமங்கலம், வடபழனி, நந்தனம், பரங்கிமலை, ஆலந்தூர் ஆகிய 15 மெட்ரோ ரயில் நிலையங்களில் ஒரு வழித்தடத்தில் இருந்து மற்றொரு வழித்தடத்துக்கு மாறி செல்லும் வசதிகள் அமைக்கப்படவுள்ளது.” என்றனர்.
மேலும், இரண்டாம் கட்டமெட்ரோ ரயில் திட்டப்பணிகள் 2026ஆம் ஆண்டு முதல் படிப்படியாக பயன்பாட்டுக்கு கொண்டுவர திட்டமிடப்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இணைப்பு பாதைகள், ஒரு வழித்தடத்தில் இருந்து மற்றொரு வழித்தடத்துக்கு மாறும் வசதிகள் அமைக்கப்பட்டால், மெட்ரோ ரயிலில் பயணிக்கும் பயணிகளின் எண்ணிக்கை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.