சென்னை மெட்ரோவில் இனி பயணிகள் சைக்கிள்களை எடுத்து செல்ல முடியாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 2020-ம் ஆண்டு முதல் சென்னை மெட்ரோ ரயிலில், சைக்கிளோடு பயணிகள் பயணம் செய்ய மெட்ரோ நிர்வாகம் அனுமதி அளித்தது. இந்தியாவிலேயே முதன்முறையாக சென்னை மெட்ரோ இந்த வசதியை அறிமுகம் செய்தது. மெட்ரோவில் சைக்கிள்களை எடுத்து செல்லும் இந்த வசதிக்கு பயணிகள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது. இந்நிலையில் சென்னை மெட்ரோவில் இனி பயணிகள் சைக்கிள்களை எடுத்து செல்ல முடியாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மெட்ரோ ரயிலில் நிலவும் இடப்பற்றாக்குறை காரணமாக இந்த வசதியை நிறுத்துவதாக சென்னை மெட்ரோ நிர்வாகம் அறிவித்துள்ளது.
மெட்ரோ ரயில் நிர்வாகி ஒருவர் இதுகுறித்து பேசிய போது “ நாங்கள் ஸ்பெஷல் கிளாஸ் கோச்களில் சைக்கிள்களை எடுத்து செல்ல அனுமதி வழங்கினோம். சிலர் மட்டுமே அந்த வகுப்புகளில் பயணம் செய்வார்கள் என்பதால், மடிக்ககூடிய சைக்கிள்களை வைக்க இடம் இருந்தது. கடந்த சில மாதங்களாக மெட்ரோ ரயிலில் பயணம் செய்வோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. எனவே எங்களால் சைக்கிள்களுக்கு இடம் இல்லாமல் போகலாம்.” என்று தெரிவித்தார்.
இதையும் படிங்க : வளர்ச்சி என்ற பெயரில் நீர்வழித்தடங்களை கான்கிரீட் தளமாக்குவதா.? தமிழகத்தை பாலைவனமாக்கும் செயல்- சீமான் ஆவேசம்
சென்னை மெட்ரோ ரயிலில் சராசரியாக தினமும் 2.2 லட்சம் பேர் பயணம் செய்கின்றனர். கொரோனா பெருந்தொற்றுக்கு முன்பு சராசரியாக தினமும் 1.16 லட்சம் பேர் மட்டுமே பயணம் செய்த நிலையில் தற்போது மெட்ரோ ரயிலில் பயணம் செய்வோர் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்துள்ளது. கடந்த 2-ம் தேதி மெட்ரோவில் 2.7 லட்சம் பேர் பயணம் செய்தனர்.
எனினும் தற்போது கொச்சி மெட்ரோ, ரயில் சைக்கிள் எடுத்து செல்ல அனுமதிக்கிறது. அதே போல் பெங்களூரு மெட்ரோ நிலையத்தில் சைக்கிள்களை நிறுத்தி வைக்க அனுமதி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க : அதிக பென்சனுக்கு விண்ணப்பிக்க காலக்கெடு நீட்டிப்பு: EPFO அறிவிப்பு