
சென்னை வானிலை ஆய்வு மையம்
தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்ததை அடுத்து கேரளா ஓட்டியுள்ள மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில் வரும் நாட்களில் வானிலை நிலவரம் எப்படி இருக்கும் என்ற தகவல் வெளியாகியுள்ளது. இதுதொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்: மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக இன்று முதல் ஜூன் 6ம் தேதி வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
சென்னை வானிலை நிலவரம்
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 36-37° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 27-28° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.
அதேபோல் நாளை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 37-38° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 27-28° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும் என வானிலை மையம் கணித்துள்ளது.
3 மாதங்களில் தமிழ்நாட்டில் கோடை 25 செ.மீ.
இதனிடையே இந்திய வானிலை ஆய்வு மைய தென்மண்டல தலைவர் அமுதா பேட்டியளிக்கையில்: மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில், தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. கடந்த 3 மாதங்களில் தமிழ்நாட்டில் கோடை மழை 25 செ.மீ. பெய்துள்ளது. இது இயல்பை விட 97% அதிகம். சென்னையில் மட்டும் இயல்பை விட 129% அதிகமாக கோடை மழை பெய்துள்ளது. சென்னையில் கடந்த 3 மாதங்களில் ஒரு நாள் கூட 40° மேல் வெப்பம் பதிவாகவில்லை. தமிழ்நாட்டில் கடந்த 24 மணிநேரத்தில் அதிகபட்சமாக திருத்தணியில் 6 செ.மீ. மழை பதிவாகியுள்ளது. நீலகிரி, கோவை, தென்காசி, குமரி உள்ளிட்ட 11 மாவட்டங்களில் இயல்பை விட அதிகமாக கோடை மழை பெய்துள்ளது என இந்திய வானிலை ஆய்வு மைய தென்மண்டல தலைவர் அமுதா தெரிவித்துள்ளார்.