
வங்கக் கடலில் உருவான டிட்வா புயல் இலங்கையில் ஒரு காட்டு காட்டி விட்டு பெரும் சேதத்தை கொடுத்து தமிழக கடலோர பகுதிகள் வழியாக மெதுவாக பயணித்தது. டிட்வா புயல் காரணமாக நேற்று சென்னையில் பெரும் மழை இருக்கும் எதிர்பாக்கப்பட்ட நிலையில், பெரிய மழை பெய்யவில்லை. ஆனால் எதிர்பாராதவிதமாக சென்னையின் பல்வேறு இடங்கள் மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று காலை முதல் கனமழை கொட்டி வருகிறது.
சுமார் 6 மணி நேரத்துக்கும் மேலாக சென்னையின் பல இடங்களில் கனமழை விடாமல் கொட்டியதால் நகரின் பெரும்பாலான சாலைகளில் தண்ணீர் ஆறுபோல் பெருக்கெடுத்து ஓடியது. தாழ்வான இடங்களில் தண்ணீர் தேங்கியது. பெரியமேடு, புரசைவாக்கம் பகுதிகளில் சாலைகளில் முழங்கால் அளவுக்கு தண்ணீர் தேங்கியது. அரும்பாக்கம், கோயம்பேடு, பெரம்பூர், தி.நகர், வடபழனி, கோயம்பேடு, நுங்கம்பாக்கம், அடையாறு, தரமணி என பெரும்பாலான இடங்களில் மழைநீர் தேங்கியதால் வாகன ஓட்டிகள், பொதுமக்கள் அவதியடைந்தனர்.
மேலும் பெரம்பூர் வியாசர்பாடி உள்பட பல இடங்களில் சுரங்கப்பாதைகளிலும் மழைநீர் குளம்போல் தேங்கியது. இது தவிர ஏராளமான இடங்களில் குடியிருப்பு பகுதிகளிலும் மழைநீர் சூழ்ந்துள்ளது. தேங்கிய மழைநீரை மின் மோட்டார்கள் மூலம் மாநகராட்சி ஊழியர்கள் உடனுக்குடன் வெளியேற்றி வந்தாலும், ஒவ்வொரு முறையும் மழை வரும்போதெல்லாம் சென்னையில் மழைநீர் தேங்குவது வாடிக்கையாகி விட்டது என பொதுமக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.
ரூ.4,000 கோடியில் மழைநீர் வடிகால் பணிகள்
சென்னையில் மழைக்காலத்தில் தண்ணீர் தேங்குவதை தடுக்க ரூ.4,000 கோடியில் மழைநீர் வடிகால் பணிகள் மேற்கொள்ளப்பட்டதாக திமுக அரசு தெரிவித்து இருந்தது. சென்னையில் 15 செ.மீ மழை வெள்ளம் வந்தாலும், ஒரு சொட்டு தண்ணீர் கூட தேங்காது என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியிருந்தார். சென்னை மாநகர மேயர் பிரியா உள்பட திமுகவினர் பலரும் சென்னையில் இனிமேல் தண்ணீர் தேங்காது என உறுதி அளித்திருந்தனர்.
தண்ணீர் தேங்காது என அடித்துக் கூறிய திமுக அரசு
ஆனால் இன்று காலை முதல் மதியம் வரை பெய்த அரைநாள் மழைக்கே சென்னை நகரின் ஏராளமான இடங்களில் தண்ணீர் தேங்கி விட்டது. மாநகராட்சி ஊழியர்கள் மூலம் தண்ணீர் உடனுக்குடன் வெளியேற்றிப்பட்டாலும், மழை நின்ற சில மணி நேரங்களில் மழை நீர் வடியும் என்று கூறப்பட்டாலும் ரூ.4,000 கோடி பணிகள் காரணமாக சென்னையில் கொஞ்சம் கூட தண்ணீர் தேங்காது என திமுக அரசு கூறியிருந்தது.
ஆகையால் இப்போது மழை பெய்யும்போது பெரும்பாலான இடங்களில் தண்ணீர் தேங்காமல் தானே இருக்க வேண்டும். ஆனால் பல இடங்களில் தண்ணீர் தேங்குவதால் அந்த ரூ.4,000 கோடி என்னாச்சு? என பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.